காலையில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போது மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 289 புள்ளிகள் அதிகரித்தது. முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்க துவங்கினர்.
கடந்த இரண்டு நாளில் சென்செக்ஸ் 850 புள்ளிகள் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 86.10 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4,924.35 ஆக உயர்ந்தது.
நேற்றுபோல் இல்லாமல் பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் சீராக உயர்வதால் பங்குச் சந்தை வட்டாரங்களில் நம்பிக்கைத் தொனி காணப்படுகிறது. அத்துடன் மற்ற நாட்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்ததும் நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.
இன்று குறிப்பாக மின் உற்பத்தி, வங்கி, ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தது. நேற்று விலை குறைந்த பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தினர். ஆனால் இதே நிலை தொடருமா என்பது சந்தேகத்திற்கு உரியது தான் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
காலை 11 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 516.02 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 17,124.03 ஆக இருந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 144.05 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4982.30 ஆக இருந்தது.
தகவல் தொழில் நுட்பம் தவிர, மற்ற பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்களும் அதிகரித்தன.
மிட் கேப் 119.93,சுமால் கேப் 14.57,பி.எஸ்.500172.51 புள்ளிகள் அதிகரித்தன.
அமெரிக்க பங்குச் சந்தையின் டோவ் ஜோன்ஸ் 133.40,எஸ்.பி 500 -9.73 புள்ளிகள் அதிகரித்தது. நாஸ்டாக் 0.02 புள்ளிகள் குறைந்தது.
ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் ஹாங்காங்கின் ஹாங்சாங் 433.11, சிங்கப்பூரின் ஸ்டெர்ட் டைம்ஸ் 37.97,ஜப்பானின் நிக்கி 46.34 புள்ளிகள் அதிகரித்தன.
தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 11.51, சீனாவின் சாங்காய் காம்போசிட் 128 புள்ளிகள் குறைந்தது.
ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் உயர்வே காணப்பட்டது.
இன்று பங்குச் சந்தைகளில் காலையில் இருந்த நிலை தொடருமா அல்லது மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தலைகீழாக மாறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.