பங்குச் சந்தை வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுத்திய ரிலையன்ஸ் பவர் பங்குகள் பட்டியிலிடப்பட்ட சிறிது நேரத்திலேயே விலைகள் சரிந்தன.
இன்று பங்குச் சந்தையின் நிலை, ரிலையன்ஸ் பவர் பங்குகளின் விலை அடிப்படையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்ட்டது. காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்கள் சரிந்தன. காலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 243 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 17,222.28 ஆக குறைந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 83 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 5037.40 ஆக குறைந்தது.
மற்ற நாடுகளில் உள்ள பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டதால், இங்கும் பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் குறைந்தன. ரிலையன்ஸ் பவர் பங்குகளில் முதலீடு செய்திருந்தவர்கள், முதன் நாளிலேயே லாபம் சம்பாதிக்க அதிக அளvd பங்குகளை விற்பனை செய்கின்றனர். இவர்கள் ஊரக மின் நிறுவனத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். ரிலையன்ஸ் பவர் பங்குகளின் விண்ணப்பம் சென்ற மாதம் 18ஆம் தேதியுடன் முடிந்தது. அன்றிலிருந்து மற்ற மின் உற்பத்தி நிறுவன பங்குகளின் விலையும் அதிகரித்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என புரோக்கர்கள் தெரிவித்தனர்.
ரிலையன்ஸ் பவர் பங்குகள் ரூ.450-க்கு ஒதுக்கப்பட்டன. இவற்றின் வர்த்தகம் இன்று தொடங்கிய போது, தேசிய பங்குச் சந்தையில் இதன் விலை ரூ.530 ஆக இருந்தது. இது ஒதுக்கீடு விலையை விட ரூ.80 அதிகம். இதே போல் மும்பை பங்குச் சந்தையில் விலை ரூ.547.80 ஆக இருந்தது. ஆனால் சில நிமிடங்களிலேயே விலை தொடர்ந்து சரிய ஆரம்பித்தது. 10.06 மணியளவில் ஒதுக்கீடு விலையை விட குறைவாக ரூ. 421 ஆக குறைந்தது. மும்பை பங்குச் சந்தையில் 420.05 ஆக குறைந்தது.
இரண்டு பங்கு சந்தைகளும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. காலை 11.45 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 17 ஆயிரத்திற்கும் குறைந்து, 16,884.41 ஆக இருந்தது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தைவிட 620.48 புள்ளிகள் குறைவு என்பது கவனிக்கத்தக்கது.
இகே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 5 ஆயிரத்திற்கும் குறைந்து குறியீட்டு எண் 4931.20 ஆக குறைந்தது. வெள்ளிக் கிழமை நிஃப்டி 5120.35 ஆக இருந்தது.
தகவல் தொழில் நுட்ப பிரிவு தவிர மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் கடுமையாக சரிந்தன.
காலை 11.45 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 316.23, சுமால் கேப் 391.84, பி.எஸ்.இ 500- 275.88 புள்ளிகள் குறைந்து இருந்தன.
தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்ப பிரிவு தவிர மற்ற பிரிவுகளின் குறியீட்டு எண்கள் 4.52 விழுக்காடு முதல் 5.86 விழுக்காடு வரை வீழ்ச்சி அடைந்தன.