பங்குச் சந்தையில் இன்று பங்குகளின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளன.
காலையில் வர்த்தகம் தொடங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 346 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 17,939.97 ஆக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 100 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5,,303.60 ஆக இருந்தது.
அதற்கு பிறகு விலைகள் 10.15 வரை அதிகரித்தது. பின் தொடர்ந்து விலைகள் குறைய ஆரம்பித்தன இந்த நிலை 11.15 மணி வரை தொடர்ந்தது.
காலை 12 மணியளவில் சென்செக்ஸ் 322.58 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 17,916.65 ஆக இருந்தது. ஆனால் மிட் கேப் 18.37, சுமால் கேப் 154.15 புள்ளிகள் சரிந்து காணப்பட்டன. இதில் ஆறுதலளிக்கக் கூடிய விஷயம் பி.எஸ்.இ-500 55.86 புள்ளிகள் உயர்ந்து, இந்த பிரிவு பங்குகள் பாதிப்பிற்கு உள்ளாகாமல் இருந்ததே.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 53.30 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5,256.70 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃடி ஜூனியர், சி.என்.எக்ஸ். டிப்டி, மிட் கேப், மிட் கேப் 50 ஆகிய பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்து காணப்பட்டன.
சி.என்.எக்ஸ். ஐ.டி., பாங்க் நிஃப்டி, சி.என்.எக்ஸ். 100, சி.என்.எக்ஸ்.-500 ஆகிய பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்து காணப்பட்டன.
அந்நிய நாட்டு சந்தைகளில் அமெரிக்கா, ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர், தென் கொரியா ஆகியவைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தது. ஆனால் ஐரோப்பிய சந்தைகளில் பங்கு விலைகள் குறைந்ததால், இவற்றின் குறியீட்டு எண்கள் குறைந்தது.