மும்பை பங்குச் சந்தையும், தேசிய பங்குச் சந்தையும் இன்று கடுமையான சரிவை எதிர்கொண்டன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 687.12 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 19,013.70 ஆக குறைந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 207.90 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 5,705.30 ஆக குறைந்தது.
காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, இரண்டு பங்குச் சந்தைகளிலுமே குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தன. முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்று இலாப கணக்கு பார்க்க துவங்கியதால், தொடர்ந்து பங்கு விலைகள் குறைந்தன. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு, சிறிது முன்னேற்றம் இருந்தது. ஆனால் இந்த நிலை அதிக நேரம் நீடிக்கவில்லை. பங்குகள் அதிக அளவு விற்பனை செய்ததால், விலைகள் குறைந்து குறியீட்டு எண்கள் தொடர்ந்து சரிந்தன.
ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, டி.எல்.எப். ஆகியவற்றின் பங்கு விலை அதிக அளவு குறைந்தது. மும்பை பங்குச் சந்தையில் வங்கி பிரிவு, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு, ரியல் எஸ்டேட் பிரிவு ஆகியவை உட்பட எல்லா குறியீட்டு எண்களும் குறைந்தன.
இன்று வர்த்தகம் நடந்த போது ஒரு நிலையில், 770.40 புள்ளிகள் சரிந்து குறியீட்டூ எண் 19 ஆயிரத்தை விட இறங்கி 18,930.42 புள்ளிகளாக குறைந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 236.20 புள்ளிகள் குறைந்தது.
மிட் கேப் 446.30, சுமால் கேப் 579.84, பி.எஸ்.இ.-500 351.43 புள்ளிகள் குறைந்தன. தேசிய பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் 1.89 புள்ளி முதல் 6.16 புள்ளிகள் வரை குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று ரூ.8,763 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனையானது. நேற்று ரூ.8,417.87 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனையாகி இருந்தது.