மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன், பல முதலீட்டு நிறுவனங்கள், இலாபம் பார்ப்பதற்கு பங்குகளை விற்பனை செய்ய துவங்கின. இதனால் பங்குச் சந்தையில வர்த்தகம் தொடங்கியவுடன் சென்செக்ஸ் 121 புள்ளிகளும், நிஃப்டி 53 புள்ளிகளும் சரிந்தன.
ஆப்பிரிக்காவில் உள்ள கென்யாவில் கலவரம் ஏற்பட்டுள்ளதால், நமிபியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை நேற்று 1 பீப்பாய் 100 டாலராக அதிகரித்து இறுதியில் 99 டாலராக முடிந்தது. இதன் காரணமாக முதலீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு தயக்கம் காட்டி, தங்கத்தில் முதலீடு செய்ய துவங்கின.
இத்துடன் அமெரிக்கா உட்பட அந்நிய நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் இன்று மந்தப் போக்கே காணப்படுகிறது. இதனால் இந்திய பங்குச் சந்தைகளின் பங்குகளின் விலைகளில் அதிக மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 14.59 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 20,479.89 புள்ளிகளாக இருந்தது. மிட் கேப் 68.78, சுமால் கேப் 155.95, பி.எஸ்.இ-500 35.29 புள்ளிகள் அதிகரித்து இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 18.85 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 6198.25 ஆக இருந்தது. தகவல் தொழில் நுட்பம், வங்கி பிரிவுகளின் குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தன. மற்ற பிரிவுகளில் 0.53 விழுக்காடு முதல் 1.05 விழுக்காடு வரை அதிகரித்து இருந்தது.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஐ.டி.சி., இன்போசியஸ், மாருதி, எல். அண்ட் டி., ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாடா ஸ்டீல், டி.சி.எஸ்., விப்ரோ, ஏ.சி.சி., அம்புஜா சிமென்ட், பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், பி.ஹெச்.இ.எல்., கிராசிம், ஹெச்.டி.எப்.சி. வங்கி, ஹெச்.டி.எப்.சி., மகேந்திரா அண்ட் மகேந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்து இருந்தது.
எஸ்.பி.ஐ., ஹின்டால்கோ, ஹிந்துஸ்தான் யூனிலிவர், ஒ.என்.ஜி.சி. ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்து இருந்தது.
நேற்று இருந்த நிலைமை போலவே, இன்றும் மதியத்திற்கு பிறகு எல்லா பிரிவு பங்குகளின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.