மும்பை பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸ் 240 புள்ளிகள் அதிகரித்தது. இதேபோல் தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 102.25 புள்ளிகள் அதிகரித்தது.
இன்று இந்திய பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலைகள் அதிகரித்து குறியீட்டு எண் உயர்ந்ததற்கு காரணம், டிசம்பர் 11 ஆம் தேதி அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குகளை வாங்குவதில் ஆர்வம் செலுத்தியதே என்று புரோக்கர்கள் தெரிவித்தனர்.
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கியபோதே குறியீட்டு எண்கள் அதிகரித்தன. காலையில் வர்த்தகம் தொடங்கிய போது சென்செக்ஸ் 19,547.09 புள்ளிகளாக இருந்தது. மாலையில் வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 240.22 புள்ளிகள் அதிகரித்து 19,603.41 புள்ளிகளாக முடிந்தது.(வெள்ளி இறுதி நிலவரம் 19,363.19).
தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 102.25 புள்ளிகள் அதிகரித்து 5,865.00 புள்ளிகளாக முடிந்தது (வெள்ளி இறுதி நிலவரம் 5,762.75).
ரிலையன்ஸ் எனர்ஜியில் அனில் திருபாய் அம்பானி குழுமம் ரூ.8,000 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது. இதனால் இன்று ரிலையன்ஸ் எனர்ஜி நிறுவனத்தின் பங்குகளின் விலை 10 விழுக்காடு அதிகரித்தது.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ள புள்ளி விபரங்களின்படி, சென்ற வெள்ளிக்கிழமை மட்டும் ரூ.1,072.07 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளன. உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.688.34 கோடிக்கு பங்குகளை வாங்கின. நவம்பர் மாதம் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்து கணிசமான தொகையை மற்ற நாடுகளுக்கு கொண்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மின்உற்பத்தி, நுகர்வோர் பொருட்கள், உலோக உற்பத்தி மற்றும் பெட்ரோலிய நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகள் விலைகள் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையின் மிட்கேப் 210.70, சுமால் கேப் 260.18, பி.எஸ்.இ-500 153.16 புள்ளிகள் அதிகரித்தன. இதே போல் தேசிய பங்குச் சந்தையில் வங்கி பிரிவு தவிர மற்ற பிரிவுகளில் உள்ள குறியீட்டு எண்கள் 2 விழுக்காட்டிற்கும் அதிகமாக உயர்ந்தன.
சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஏ.சி.சி. அம்புஜா சிமென்ட், எல்.அண்ட்.டி., ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பஜாஜ் ஆட்டோ, சிப்லா, டி.எல்.எப்., ஹின்டால்கோ, ஐ.டி.சி., மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், பி.ஹெச்.இ.எல்., கிராசிம், என்.டி.பி.சி., சத்யம், எஸ்.பி.ஐ., டி.சி.எஸ்., விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இன்போசியஸ், பார்தி ஏர்டெல், ஹெச்.டி.எப்.சி., ஹெச்.டி.எப்.சி. வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலிவர் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.