மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 678.18 புள்ளிகள் சரிந்து 19 ஆயிரத்திற்கும் குறைவாக 18,602.02 புள்ளிகளில் முடிந்துள்ளது!
இதேபோல, தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டியும் 219.85 புள்ளிகள் குறைந்து 5561.05 புள்ளிகளாக குறைந்தது.
இன்று காலையில் இருந்தே அந்நிய முதலீட்டு நிறுவனங்களும், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் அதிகளவு பங்குகளை விற்பனை செய்தனர்.
இந்தியாவின் பங்குச் சந்தையில் மட்டுமல்லாது மற்ற நாட்டு பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன. பிரான்சின் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சி.ஏ.சி 1.59 விழுக்காடு, ஜெர்மனியின் டி.ஏ.எக்ஸ் 1.29 விழுக்காடு பிரிட்டனின் பங்குச் சந்தை குறியீட்டு எண் 1.36 விழுக்காடு சரிந்தன.
இன்று அமெரிக்க ரிசர்வ் வங்கி அடுத்த ஆண்டு அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் என்று அறிவித்ததால், ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலைகள் குறைந்தன.
ஹாங்காங் பங்குச் சந்தை குறியீட்டு எண் ஹாங் சிங் 4.15 விழுக்காடு, ஜப்பானின் நிக்கி 2.46 விழுக்காடு, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 2.65 விழுக்காடு, தைவானில் 2.27 விழுக்காடு, தென்கொரியாவின் சியோல் 3.49 விழுக்காடு சரிந்தன.
இந்திய பங்குச் சந்தைகளில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், என்.டி.பி.சி, பி.ஹெச்.இ.எல், ஐ.டி.சி, ரிலையன்ஸ் எனர்ஜி ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகளவு குறைந்தது. சென்செக்ஸ் பிரிவில் உள்ள எல்லா நிறுவனங்களின் பங்குகளின் விலைகளும் குறைந்தன. இயந்திர உற்பத்தி நிறுவனங்கள், வங்கி, மின் உற்பத்தி, உலோக தொழிற்சாலை ஆகியவற்றின் பங்குகள் விலை குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் மிட் கேப் 408.03 புள்ளிகள், சுமால் கேப் 425.93 புள்ளிகள், பி.எஸ்.இ-500 331.02 புள்ளிகள் சரிந்தன.
தேசிய பங்குச் சந்தையிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.