மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று விலைகள் குறைந்தன.
தங்கம், வெள்ளியின் விலை நேற்று சிறிது அதிகரித்தது. ஆனால் இன்று நிலைமை மாறி விலை குறைந்தது. வெள்ளியின் விலை கிலோவிற்கு ரூ.40 ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.45 ம் குறைந்தது.
வெளிநாட்டு சந்தைகளில் இருந்து வந்த தகவல்களால், தங்கம், வெள்ளி இருப்பில் வைத்திருந்த மொத்த வர்த்தகர்கள், அதிகளவு விற்பனை செய்த காரணத்தினால், இவைகளின் விலை குறைந்ததாக மும்பை வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
நேற்று விலை அதிகரித்ததால், வெள்ளியை பயன்படுத்தும் தொழிற்சாலைகள், வாங்குவதற்கு ஆர்வம் காண்பிக்கவில்லை. காலையில் வர்த்தகம் தொடங்கியதற்கு பிறகு கிலோவிற்கு ரூ.40 வரை குறைந்தது. இதற்கு காரணம் வெளிநாடுகளில் இருந்து வந்த தகவலும், மற்றும் உள்நாட்டில் மற்ற நகரங்களில் வெள்ளியை வாங்குவதற்கு ஆர்வம் இல்லாததே காரணம் என்று தெரியவருகிறது.
லண்டன், நியூயார்க், மற்ற ஆசிய நாடுகளிலும் வெள்ளியின் விலை குறைந்தது. நேற்று அவுன்ஸ் (28.3 கிராம் ) 13.55 டாலர் முதல் 13.58 டாலர் வரை விற்பனையானது. இன்று அவுன்ஸ் 13.50 முதல் 13.53 ஆக குறைந்தது.
தங்கம் வாங்குவதில் நகை தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. காலையில் 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.9,520 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.9,470 ஆகவும் இருந்தது. நகை தயாரிப்பாளர்கள் ஆர்வம் காண்பிக்காத காரணத்தினால் முடிவில் 22 காரட் 10 கிராம் ரூ.9,470 ஆகவும், 24 காரட் 10 கிராம் ரூ.9,520 ஆகவும் இருந்தது.