Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊட்டச்சத்து உர நிர்வாகம் - சவால்கள்

- டாக்டர் மங்களராய்

ஊட்டச்சத்து உர நிர்வாகம் - சவால்கள்
உணவு உற்பத்திக்கு உரங்கள் மிகவும் அவசியமானவை. எனவே உரங்களை சரியானபடி உபயோகிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

மண் வளமாக இருக்க வேண்டும் எனில் ஒருங்கிணைந்த வகையில் விவசாய ஊட்டச் சத்து உர நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அதிகளவு விளைச்சலையும் லாபத்தையும் காண முடியும்.

ஆகவேதான் அரசு சத்துள்ள இடுபொருளுக்கு தகுந்த விலநிர்ணயித்து அதே நேரத்தில் மானியமும் அளிக்கின்றது. உரங்களை நன்கு மேம்படுத்தவும், உரங்களை கொண்டுச் செல்ல மானியங்களும், சூப்பர் பாஸ்பேட் தயாரிக்கும் தொழிற்சாலைகளை மீண்டும் அமைக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

உரங்கள் சரியான முறையில் விநியோகிக்கப்பட வேண்டுமெனில் உரத் தொழிற்சாலைகளுக்கு உத்வேகம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் இதில் முதலீடு செய்யப்பட்டிருப்பது மிகவும் குறைவு.

உரங்களை இறக்குமதி செய்வதை குறைக்கவும், உள்நாட்டிலேயே மலைப் பாறைகளில் இருந்து கிடைக்கும் தரம்குறைந்த பாஸ்பேட்ஸ், உபயோகப்படாமல் உள்ள மைக்கா, பாஸ்போ ஜிப்சம் ஆகிய உர இடுபொருள்களை அதிகளவு பயன்படுத்தினால் விளை நிலத்திற்கு தேவையான பாஸ்பரஸ், பொட்டாசியம், கந்தகம் ஆகியவை கிடைக்கும். இதனால் அரசு இவற்றை ஊக்குவிக்கிறது.

அதே சமயத்தில் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் விளை நிலங்களுக்கு பயன்படுத்த தேவையான கம்போஸ்ட் உரம் மற்றும் உயிரி உரங்கள் போன்றவற்றை தயாரிக்க உதவிகளையும் அளித்து வருகிறது.

சிறந்த முறையில் உரங்களை பயன்படுத்த வேண்டுமெனில் மண் பரிசோதனை செய்வதும், இதற்கான பணிகளை வலுப்படுத்துவதும் மிகவும் அவசியம்.

தானியங்களின் உற்பத்தி அதிகரிப்பதற்கு உரங்கள் மிக முக்கியம். எதிர்காலத்திலும் கூட தானிய உற்பத்தி அதிகரிப்பதற்கு உரங்கள் மிக உதவியாக இருக்கும்.

ஆனால் தற்போது அதிக திறனற்ற ஊட்டச்சத்து உரங்களை விளை நிலங்களுக்கு இடுவது என்பது கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. இதுபோன்ற உரங்களை இடுவதால் உற்பத்திக்காகும் செலவு அதிகமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சுற்றுச் சூழலையும் அவை பாதிக்கின்றன.

நல்ல சத்துள்ள உரங்களை உபயோகிப்பதை 10 சதவீதம் அதிகரித்தாலும் நாட்டின் 20 மில்லியன் ஹெக்டேர் அளவிற்கு விளைச்சலை மேலும் அதிகரிக்க முடியும்.

சரியான உர வகைகள் பயன்படுத்தாமல் இருப்பதுடன், இயற்கை உரங்கள் மிக குறைந்த அளவே பயன்படுத்ப்படுவதால் மண்வளம் பாதிக்கப்பட்டு உற்பத்தியும் குறைகிறது.

மண்வளம் கெடுவதற்கு, இதை பாதுகாக்க தேவையான முக்கிய இடுபொருள்களை இடாமல் இருப்பதும் மற்றொரு காரணமாகும்.

ஆகையால் ஊட்டச்சத்துள்ள உர வகைகளை அளிப்பதற்கு தேவையான நிர்வாகத்தை நாம் அளிக்காததால் இந்தியாவில் மண்வளம் குறைந்து காணப்படுகிறது.

3 சதவீத தாமிர சத்தில் இருந்து 80 சதவீத நைட்ரஜன் சத்து வரை மண்ணில் குறைபாடுகள் காணப்படுகின்றன. இப்போது கந்தகம், துத்தநாகம், போரான் ஆகிய ஊட்டச்சத்துக்களின் குறைபாடு மிக அதிகமாக காணப்படுகின்றது. சுமார் 47 மில்லியன் ஹெக்டேர் நிலங்களில் கந்தக குறைபாடுகள் காணப்படுகின்றன.

வண்டல் மண் அதிகமுள்ள கங்கை சமவெளி, தக்காணப் பீடபூமி மற்றும் சிகப்பு மண் அதிகமுள்ள பிற இடங்களிலும், மற்ற பல இடங்களில் துத்தநாக குறைபாடுகள் காணப்படுகின்றன.

பீகார், ஒரிசா, மேற்கு வங்காளம் போன்ற இடங்களில் உள்ள விளை நிலங்களில் போரான் சத்து குறைவாக காணப்படுகின்றது. இதுபோன்ற இடங்களில் தேவையான மற்றவகை உரங்களை இடாததால் பயிர் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

மண் வளத்தை சரியானபடி பாதுகாப்பதற்கும், ஊட்டச்சத்துள்ள உரங்களை மேலும் பயன்படுத்தவும் ஒருங்கிணைந்த சத்துள்ள உர நிர்வாகம் அவசியம். இதன்படி ரசாயனம் மற்றும் இயற்கை உரங்களை தேவையான அளவு நிலத்தில் இடும் முறை உருவாக்கப்படும்.

2025 ஆம் ஆண்டில் 300 டன் அளவுள்ள உணவு தானியங்களை உற்பத்தி செய்ய 45 டன் அளவுள்ள உரங்கள் தேவை என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தற்போது 22 மில்லியன் டன் அளவுள்ள உரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆகவே இப்போதுள்ள உரத் தொழிற்சாலைகளில், அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்றபடி உற்பத்தியை உயர்த்த வேண்டியது மிக முக்கியம்.

இதற்காக நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் கம்போஸ்ட் உரங்களை தயாரிக்கும் பிரிவுகளை அரசு அமைக்க வேண்டியது அவசியமாகிறது.

2000 ஆம் ஆண்டு உரத் தொழிற்சாலை பிரிவில் உற்பத்தி மற்றும் மூலதனம் ஆகியவற்றில் மந்தமான நிலைமையே காணப்பட்டது. ஆகவே நாட்டில் உணவு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுகிறது.

தற்போது 10 மில்லியன் டன் அளவுக்கு உரப் பற்றாக்குறை உள்ளது. இது 11-வது ஐந்தாண்டு திட்ட இறுதியில் 16 மில்லியன் டன்னாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே உரங்களை இறக்குமதி செய்யும் நிர்ப்பந்தம் ஏற்படுவதுடன், இதற்கான செலவினங்களும் அதிகரிக்கின்றன.

சர்வதேச சந்தையில் உரங்களுக்கு தேவையான மூலப் பொருட்களின் விலையும், உரங்களின் விலையும் அதிகரித்துள்ளது.

எனவே உள்நாட்டுத் தேவைக்காக உரங்களை அதிக அளவு உற்பத்தி செய்ய, உரத் தொழிற்சாலைகளுக்கு ஊக்கமளிக்கப்பட வேண்டும். பாஸ்பேட் மற்றும் பொட்டசியம் உர வகைகள் தயாரிப்பதற்கு தேவையான மூலப் பொருட்கள் நம் நாட்டில் குறைவாகவே உள்ளன. பாஸ்பேட் உர வகைகளை தயாரிக்க உயர்ந்த வகை மலைப்பாறைகளில் கிடைக்கும் பாஸ்பேட் மற்றும் பாஸ்பாரிக் அமிலம் ஆகியவை அதிகளவில் தேவை.

இவை தற்போது இறக்குமதி செய்யப்படுகின்றன. இறக்குதி செய்யப்படும் பொட்டாசியம் உர வகைகள் நல்ல தரமுள்ளதாக இல்லை. பாஸ்பேட் உரங்களுக்கு தேவையான மலைப் பாறைகளில் கிடைக்கும் பாஸ்பேட், கந்தகம் மற்றும் பாஸ்பாரிக் அமிலம் ஆகியவற்றின் விலைகள் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு முறையே 3.5, 6.5, 2.8 மடங்கு உயர்ந்துள்ளன.

உள்நாட்டு தேவையை நிறைவேற்றும் வகையில், உரத் தொழிற்சாலைகள் உற்பத்தியை அதிகரிக்கவும், எதிர்காலத்தில் இத்துறையில் உள்ள சவால்களை சந்திக்கவும் தேவையான கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம்.

உரத் தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும், புதிய தொழிற்சாலைகளை அமைக்கவும், வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து தொழிற்சாலைகளை அமைக்கவும், இதற்கு தேவையான மூலதனத்தைப் பெறவும் சாதகமான கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும்.

மொரோக்கா, ஜோர்டன், செனகல், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து நிறுவனங்களை அமைக்கும் முயற்சிகள் துவங்கியுள்ளன. உற்பத்தியாகும் பொருட்களை அந்நாடுகளே பெற்றுக் கொள்ளும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி செயல்படும் தொழிற்சாலைகளைவிட, நாப்தைவை எரி பொருளாக பயன்படுத்துவதால் 2.5 மடங்கு செலவு அதிகமாகிறது. இந்த செலவை குறைக்க நாப்தாவை பயன்படுத்தும் தொழிற்சாலைகளில், எரிவாயுவை பயன்படுத்தி செலவினங்கள் குறைக்கப்பட வேண்டும்.

இயற்கை எரிவாயுவை உரத் தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். கிருஷ்ணா, கோதவரி படுகையில் கிடைக்கும் இயற்கை எரிவாயு விநியோகிக்கப்படுவது தற்போது அதிகரித்துக் காணப்பட்டாலும் தேவை இன்னும் அதிகமாகவுள்ளது.

உரங்களுக்கு மட்டும் தற்போது மானியங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அதில் உள்ள சத்துக்களின் அளவை பொருத்து மானியங்கள் வழங்கப்படுவதில்லை. ஆகவே மண் வளம் குறைவதற்கு இதுவும் காரணமாகிறது.

உர வகைகளை நன்கு மேம்படுத்த செலவினங்கள் அதிகமாவதால் பெரிய அளவில் இதுபோன்ற உரங்களை உற்பத்தி செய்ய முடியவில்லை.ஆகவே இதற்கு தேவையான உரக் கொள்கை அவசியமாகிறது.

இதை ஊக்குவிக்க வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகளை அரசு சமீபத்தில் எடுத்துள்ளது. உர வகைகளில் சத்துக்களின் அளவைப் பொருத்து விலையையும் மானியத்தையும் நிர்ணயம் செய்தல் மற்றும் உர வகைகளை மேலும் மேம்படுத்த செலவிடப்படும் தொகைகளை உற்பத்தியாளர்களுக்கு அளித்தல் போன்றவற்றை அரசு அறிவித்துள்ளது.

இந்த புதிய கொள்கையின்படி மண்ணுக்கும், மண் வளத்திற்கும் பயிருக்கும் தேவையான உர வகைகளை பயன்படுத்த முடியும். சூப்பர் பாஸ்பேட் உரங்களை தயாரிக்கும் உர தொழிற்சாலைகளுக்கு அவைகளை கொண்டு செல்ல மானியங்கள் அளிப்பது குறித்த முடிவையும் அரசு எடுத்துள்ளது.

உரத் தொழிற்சாலைகளில் இருந்து தயாரிக்கப்படும் உரங்களை பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல இதுபோன்ற மானியம் பயன்படத்தக்க வகையில் அமையும்.

இதனால் இதுபோன்ற தொழிற்சாலைகள் மீண்டும் மறுமலர்ச்சி பெறும். இதுபோன்ற தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உரங்களில் கந்தக சத்து இருப்பதால் விளை நிலங்களில் காணப்படும் இந்த குறை நீக்கப்படும்.

தற்போது 15 உர வகைகள் மட்டுமே இதுபோன்ற மானிய திட்டங்களின் கீழ் வருகின்றன. மேலும் பல உர வகைகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. அவற்றுக்கும் ஊக்கமளிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

வெளிநாட்டிலிருந்து உர வகைகள் மற்றும் அதற்கு தேவையான மூலப் பொருட்களின் இறக்குமதியைக் குறைக்க உள்நாட்டிலேயே கிடைக்கும் சத்துள்ள உர வகைகள் பயன்படுத்தப்பட வேண்டியதும் அவசியம்.

நாட்டில் குறைந்த தரமுள்ள மலைப்பாறைகளில் இருந்து கிடைக்கும் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ள மைகா ஆகியவை கிடைக்கின்றன.பாஸ்போ ஜிப்சம், பாஸ்பாரிக் அமில அடிப்படையிலான உரத் தொழிற்சாலையில் கிடைக்கிறது. இதில் 16 சதவீதம் முதல் 18 சதவீதம் கந்தக சத்து இருக்கிறது. விளை நிலங்களுக்கு இதை பயன்படுத்த முடியும்.

உரத் தொழிற்சாலைகள் ஆண்டொன்றுக்கு 5 முதல் 6 மில்லியன் டன் அளவுள்ள இந்த ரசாயானப் பொருள்களைத் தயாரிக்கின்றன. கந்தக சத்துள்ள உரமாக இதை பயன்படுத்த முடியும் என்பதால் அவற்றை எடுத்துச் செல்ல மானியங்கள் வழங்கலாம்.

இதனால் ஆண்டு ஒன்றுக்கு ஒரு மில்லியன் டன் அளவுள்ள கந்தக சத்தை விநியோகிக்க முடியும். அதே போல் ஜிப்சம் என்ற ரசாயனப் பொருளில் 16 விழுக்காட்டில் இருந்து 18 விழுக்காடு வரை கந்தக சத்து உள்ளது. இதை கந்தக சத்து குறைந்த நிலங்களில் பயன்படுத்த முடியும்.

அதே போல சுண்ணாம்பு சத்து மற்றும் எஃகு தொழிற்சாலைகளில் இருந்து கிடைக்கும் கழிவுப் பொருட்கள் ஆகியவற்றை அமில சத்துள்ள நிலங்களில் பயன்படுத்தி மண்வளத்தை திறமையாக நிர்வகிக்கலாம்.

இதற்கு மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் எந்த வகையான உர வகைகள் விளை நிலங்களுக்கு இடப்பட வேண்டும், அவை எவ்வாறு விநியோகிக்கப்பட வேண்டும் போன்ற புள்ளி விவரங்கள் தயாரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மண்வள பரிசோதனைக் கூடமாவது அமைக்கப்பட வேண்டியது அவசியம்.

விளை நிலங்களை சுண்ணாம்புச் சத்து கொண்டவைகளாக மாற்றுவதன் மூலம், நமது உரத் தேவைகளை பாதியாகக் குறைக்கலாம்.

குறிப்பாக மொச்சை, தட்டை போன்ற பயிர்களுக்கும் இதர பருப்பு வகைகளை பயிரிடும் நிலங்களுக்கும் இது உதவும்.

நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் மண் புழு உரம், கழிவுகளை மறு சுழற்சி முறையில் பயன்படுத்துதல் மற்றும் பசுந்தாள் உர உபயோகம் போன்றவை ஒரு இயக்கமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.

நானோ தொழில்நுட்ப உரவகைகளை தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட வேண்டும். இதன் மூலம் ஊட்டம் மிகுந்த உரவகைகளை தயாரிப்பது இயலும். இதன் மூலமாக எவ்வித உரங்கள் விளை நிலங்களுக்குத் தேவை என்பது தெரிய வரும்.

(இக்கட்டுரையாளர் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் செயலாளராக உள்ளார். அத்துடன் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குனராகவும் இருக்கின்றார்)

Share this Story:

Follow Webdunia tamil