உலக அளவில் பல்வேறு பொருட்களின் விலை உயர்வே பணவீக்கத்திற்கு காரணம் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
இந்தியாவில் பணவீக்கம் அதிகரிப்பதற்கு காரணம், உலக அளவில் பல்வேறு பொருட்களின் விலை அதிகரிப்பதே. உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு பொருளாதார ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பணவீக்கம் அதிகரிப்பதால், அத்தியாவசிய பண்டங்களின் விலைகள் உயருகின்றன. இது அரசுக்கு கவலையை ஏற்படுத்துகிறது.
அதே நேரத்தில் பணவீக்கம் சென்ற வருடம் (2007) ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் 6.4 விழுக்காடாக இருந்தது. இந்த வருடம் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 4.3 விழுக்காடாக இருக்கின்றது என்று கூறினார்.
(இந்த வருடம் மார்ச் 1 ந் தேதியுடன் முடிவடையும் வாரத்தில் 5.11 விழுக்காடாக இருப்பதாகவும், இது முந்தைய வாரத்தி்ல 5.02 விழுக்காடாக இருந்தது. ஆனால் சென்ற வருடம் இதே காலகட்டத்தில் 6.51 விழுக்காடாக இருந்தது என்று நேற்று காலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. நிதி அமைச்சர் சிதம்பரம் மாலையில் பட்ஜெட் விவாதத்திற்கு பதிலளித்தார்).
உள்நாட்டில் விலை உயர்வு பற்றி சிதம்பரம் பேசுகையில், 2004 ஆம் ஆண்டு பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 37 டாலராக இருந்தது. இது 2005 இல் 60 டாலராகவும், அடுத்த வருடம் 90 டாலராகவும் அதிகரித்தது. இப்போது 110 டாலராக உயர்ந்து விட்டது.
இதே போல் இந்தியா அதிக அளவு இறக்குமதி செய்யும் பாமாயில் விலை 2004 இல் 410 டாலராக் இருந்தது, 2005 இல் 710 டாலராக அதிகரித்து, அடுத்த வருடம் 1077 டாலராக உயர்ந்தது. இதன் விலை இப்போது 1177 டாலராக அதிகரித்து விட்டது.
இதே போல் கடந்த மூன்று ஆண்டுகளாக சர்வதேச அளவில் கோதுமை விலையும் அதிகரித்துவிட்டது. இதே போல் தான் அரிசி விலையும் 2004 இல் 1 டன் 225 டாலராக இருந்தது, 2005 இல் 296 டாலராகவும், அடுத்த வருடம் (2006) 364 டாலராக அதிகரித்து, இப்போது 510 டாலராக உயர்ந்து விட்டது.
உணவுப் பொருட்களின் விலைகள் மட்டுமல்லாது, துத்தநாகம், வெள்ளீயம்,உருக்கு, மகனீசியம் உட்பட பல்வேறு உலோகங்களின் விலைகள் எதிர்பாரதா அளவு அதிகரித்தது, இவற்றின் உள்நாட்டு விலை உயர்வுக்கு காரணமாகும்.
சில மாநிலங்கள் தாது பொருட்களுக்கு அதிக ராயல்டி கேட்கின்றன. இது இந்த உலோகங்களின் விலை உயர்வதற்கே வழிவகுக்கும் என்று சிதம்பரம் கூறினார்.
முன்னதாக கேள்வி நேரத்தின் போது சிதம்பரம் பதிலளிக்கையில், கோதுமையின் குறைந்த பட்ச ஆதார விலை குவின்டாலுக்கு ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் நெல் விலையும் குவின்டாலுக்கு ரூ.1,000 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு நிர்ப்பந்தம் செலுத்தப்படுகிறது.
நெல் ஆதிர விலையை அதிகரித்தால், இதன் காரணமாக உள்நாட்டில் உண்வு தானியங்களின் விலையும் அதிகரிக்கும்.
இந்த மாதிரியான சூழ்நிலையில் விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் , அரசு எடுக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு, சிறிது பலனே கிடைக்கின்றன.
இதற்கு ஒரே மாற்று வழி உணவு தானியங்களின் உற்பத்தியில், குறிப்பாக சமைய்ல் எண்ணெய், பருப்பு வகைகளின் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதே. இவை அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.
உணவு தானியங்களை உற்பத்தி செய்வது, விலை உயர்வை இறக்குமதி செய்வதற்கு சமம். இதனால் பணவீக்கம் அதிகரிக்கிறது.
இப்போது உணவு தானியங்கள், சமையல் எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்க அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று சிதம்பரம் கூறினார்.