உங்கள் வீட்டில் யார் நிதி அமைச்சர்?
, வெள்ளி, 29 பிப்ரவரி 2008 (16:44 IST)
பிப்ரவரி என்றாலே வரி, பட்ஜெட் என்று களை கட்டும் மாதம்தான். ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட் என்று பொதுமக்களை வெகுவாக எதிர்பார்ப்பைத் தூண்டும் மாதமாகிறது இந்த பிப்ரவரி. இதனால்தானோ என்னவோ மாதத்திலேயே வரியை வைத்துக் கொண்டுள்ளது இந்த மாதம்.அது போகட்டும்... ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்கிறார்.ஆனால் நமது வீடுகளில் ஒவ்வொரு மாதமும் நிதிநிலை அறிக்கையை யார் தயாரிக்கிறார்கள்? யார் தயாரித்தால் நன்றாக இருக்கும்? யார் அதன் முழுப் பொறுப்பையும் கவனிப்பது என்று பார்ப்போமா?ஒவ்வொரு மாதமும், குடும்ப வருமானத்தின் வரவைக் கொண்டு, அம்மாதத்திற்கான செலவுகளை பட்டியலிட்டு வரவு செலவுக் கணக்கை மாதத்தின் முதல் வாரத்தில் தாக்கல் செய்து விட வேண்டும்.சிறிய குடும்பமாக இருந்தாலும் சரி, பெரிய குடும்பமாக இருந்தாலும் சரி, வரவு செலவு கணக்கு போட்டு நடத்தும் குடும்பம்தான் பல்கலைக்கழகமாக விளங்கும்மற்றவை எல்லாம் குட்டிச்சுவராகிவிடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.பட்ஜெட்டை தயாரிப்பதோடு மாத செலவு அட்டவணை ஒன்றையும் தயாரித்து வைத்துக் கொள்ளலாம். அல்லது மாதக் காலண்டரையும் பயன்படுத்தலாம். ஒவ்வொரு நாளும் குடும்ப உறுப்பினர்கள் செய்யும் மொத்த செலவு மற்றும் தனி நபர் ஒருவருக்கான செலவுகளை அதில் குறித்து வைத்தால் மாத கடைசியில் செலவுத் தொகையைக் கணக்கிட உதவும்.யார் இந்த வரவு செலவுக் கணக்கை தயாரிக்க வேண்டும் என்றால் அதற்கான பதில் குடும்பத்தார்தான். ஆம். குடும்ப பட்ஜெட்டில் எல்லோரும் பங்கேற்று தயாரித்தால்தான் அதில் உள்ள முக்கியத்துவத்தை எல்லோரும் உணர்வர். மேலும் அதன்படி செயல்பட உதவியாகவும் இருக்கும்.கணவர் மட்டும் பட்ஜெட் போட்டு செலவு செய்ய. மனைவி, குழந்தைகள் ஜாலியாக பணத்தை காலி செய்து கொண்டிருந்தால் அதற்கு பெயர் பட்ஜெட் குடும்பமாக இருக்காது. கணவன் - மனைவியைப் பொறுத்து ஒவ்வொரு வீட்டிலும் வசதிக்கேற்ப ஒவ்வொருவர் பட்ஜெட்டை தயாரிக்கலாம். அதில் குடும்பத்தினர் தங்களது கருத்துக்களையும், தேவைகளையும் விவரமாக அளிக்கலாம்.போட்ட பட்ஜெட் படி எப்படி செலவு செய்வது?நாம் இந்த மாதத்திற்கான செலவு இது இது என்று வகுத்து வைத்திருந்தாலும், எதிர்பாராத செலவுகளும் வரத்தான் செய்யும். நாம் போட்ட தொகையைவிட கூடுதலாகவும் செய்யும். அதனை அம்மாத பட்ஜெட்டில் குறித்து வைத்து அடுத்த மாத பட்ஜெட் தயாரிக்கும் போது அதனை கவனத்தில் வைத்து தயாரிக்க வேண்டும்.ஒரு செலவு அதிகரிக்கும் போது மற்றொரு செலவை எவ்வகையிலாவது குறைக்கவோ அல்லது தவிர்க்கவோ செய்யலாம். அல்லது அடுத்த மாதத்திற்கு தள்ளிப்போடலாம்.பட்ஜெட்டில் செலவிற்கான பட்டியலில் இடம்பிடிக்கும் வகையறாக்களைப் பார்க்கலாம்...வாடகை வீடு என்றால் வாடகைத் தொகைதான் முதல் இடத்தைப் பிடிக்கும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் மளிகை சாமான் வாங்கும் தொகை முதலிடத்தில் இருக்கும். இரண்டாம் இடத்தைப் பிடிப்பது பெரும்பாலும் பால் வாங்கும் செலவாகும். அடுத்ததாக மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், பள்ளிக் குழந்தைகளின் மாதக் கல்விக் கட்டணம் போன்றவை இடம்பெறும்.ஒவ்வொரு மாதமும் எதிர்பாராத மருத்துவச் செலவு, சுபச் செலவு (திருமணம், பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மொய் வைப்பது) போன்றவற்றிற்கு தனியாக ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி விடுவது நல்லது.வாகனம் இருப்பின் அதற்கான பெட்ரோல் செலவு, சீரமைப்பது போன்றவற்றிற்கும் பணத்தை ஒதுக்கி விட வேண்டும்.
மளிகை வேண்டுமானால் மொத்தமாக வாங்கி விடலாம். காய்கறிகள் வாரத்திற்கு இரு முறை அல்லது 3 முறைகளில்தானே வாங்க முடியும். எனவே அதற்கான தொகையைத் தனியாக ஒதுக்க வேண்டும்.இதல்லாமல் நமது தினசரிச் செலவுக்கான ஒரு தொகையை ஒதுக்கிவிட்டு மீதமிருப்பதை சேமிப்புக் கணக்கில் போடும் பழக்கத்தை ஒவ்வொரு குடும்பத்தாரும் கொண்டு வர வேண்டும்.சேமிப்பா? செலவிற்கே வழியில்லை என்கிறீர்களா? ஒவ்வொரு மாதமும் வரவு செலவு கணக்கு எழுத துவங்கிவிடுங்கள். மாத இறுதியில் இந்த மாதம் எந்த செலவு அதிகப்படியானது என்பதை அறிந்து அதனை அடுத்த மாதம் சிக்கனப்படுத்திப் பாருங்கள். உங்கள் வரவு செலவு கணக்கு நஷ்டத்தில் இருந்து லாபத்தில் செல்வதைப் பார்க்கலாம்.
கடந்த மாத பட்ஜெட்டை வைத்து அடுத்த மாத பட்ஜெட்டை உருவாக்கினால் அது இன்னமும் சிறப்பாக அமையும்.
சிக்கனமாக வாழுங்கள். அதற்காக கஞ்சப்பிசினாரி ஆகவும் வேண்டாம், வேண்டாத செலவு செய்து கடனாளியாகவும் வேண்டாம்.
சிறந்த குடும்பம் என்ற பெயரைப் பெறுங்கள்.