நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தரமான விதை, உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை தேர்வு செய்வதற்கு உரிய ஆலோசனைகளைப் பெற வீடியோ கான்பரன்சிங் வசதியை பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.
மேலும் சந்தைப் பொருளாதாரம், சந்தையில் வேளாண் தொடர்பாக வரும் பொருட்கள் பற்றிய தகவல்களை இணையத்தின் வாயிலாக இயங்கும் வீடியோ கான்பரன்சிங் மூலம் சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் விளக்கம் கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.
கிராம விவசாயக் குழுக்கள் பலவற்றை ஒருங்கிணைத்து செயல்பட இந்த வீடியோ கான்பரன்சிங் பெரிய அளவில் பயன்படுவதாக ராஜஸ்தான் மாநில வேளாண்மைத் துறை நிபுணர் மேத்தா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் வேளாண் குழுக்களை ஒருங்கிணைக்க இருவழி வீடியோ கான்பரன்சிங் வசதியை அம்மாநில அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது.
இது விவசாயிகளின் வாழ்க்கை மேம்பட பெரிதும் உதவுவதாக மகாரானா பிரதாப் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் எஸ்.எல். மேத்தா தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ கான்பரன்சிங் வசதியை வேளாண் கல்வி முடித்த பயிற்சியாளர்கள், விவசாயிகள், வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, மீன் வளத்துறை மற்றும் வேளாண் எந்திரவியல் சார்ந்த அலுவலர்களின் தகுதியை மேம்படுத்த பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தேவையான கருத்துரைகள் மற்றும் விளக்கங்கள் அளிக்கப்படுகிறது.
கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களுடைய பிரச்சினைகளை கிராம விவசாய குழுத் தலைவரிடம் தெரிவிக்கின்றனர். இப்பிரச்சினைகளுக்கு அக்கிராமங்களில் தீர்வு கிடைக்காத நிலையில் அவர்கள் உதய்பூருக்கு வரவேண்டிய நிலை முன்பு இருந்தது. தற்போது வீடியோ கான்பரன்சிங் முறையில் அவர்களுடைய பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட வேளாண் துறை வல்லுநர்கள் மூலம் தீர்க்கப்பட்டு வருகிறது.
இந்த வசதியைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் கிராமப்பகுதிகளில் வாழும் மாணவர்களின் வாழ்க்கைத் திறனை உயர்த்தும் வகையில் தையல் உள்ளிட்ட தொழில்களை சொல்லிக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வீடியோ கான்பரன்சிங் உதவியுடன் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதில் ஒருங்கிணைந்த கிராம விவசாயிகள் குழு மையம் உதவி செய்வதாகவும், விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை வாங்க விரும்புபவர்கள் இந்த மையத்தில் இருந்து சம்பந்தப்பட்ட விவசாயியுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் வியாபாரம் மேற்கொள்ள எளிதாகிறது.
இந்த முறையில் மேலும் பயனுள்ளதாக ஆக்க அதில் விவசாயிகளால் பயன்படுத்தப்படும் மொழியின் திறனை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்துடன் 2004ஆம் ஆண்டு தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இதுபோன்ற வீடியோ கான்பரன்சிங் முறைக்கு ஏற்பாடு செய்தது. இதில் கடலை விவசாயிகள் பெருமளவில் பங்கேற்று அவர்களுடைய பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்களுடன் கலந்துரையாடினர்.
இரண்டாவது வீடியோ கான்பரன்சிங் கடந்த ஜுன் 2005ஆம் ஆண்டு இதேப் பகுதியில் உள்ள 30 கிராமங்களைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்களுக்கு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் தங்கள் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் வாய்ப்புகளை நிபுணர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 7 மண்டலங்களில் இந்த வீடியோ கான்பரன்சிங் வசதியை விரிவுபடுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த வீடியோ கான்பரன்சிங் வசதி முறையில் விவசாயிகள் நேரடியாக நிபுணர்களுடன் தொடர்பு கொள்ளும்போது ஏற்படும் மொழிப் பிரச்சினையைத் தொடர்ந்து இருவரிடையே மொழி பெயர்ப்பாளர்களை நியமனம் செய்து விவசாயிகள் கூறும் பிரச்சினைகளை நிபுணர்கள் உள்ளபடியே தெரிந்து கொள்ளவும், அப்பிரச்சினைகளுக்கு நிபுணர்கள் கூறும் விளக்கங்களை விவசாயிகள் தெளிவாகப் புரிந்து கொள்ளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜெரால்டு சில்வர்ஸ்டர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக விவசாயிகளிடம் இருந்து அவர்களுடைய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கேட்டு ஒருங்கிணைத்துக் கொள்கிறோம். அதன்பின்னர் அதற்குரிய பதில்களை நிபுணர்களிடம் பெற்று வழங்கி வருகிறோம் என்று தெரிவித்த அவர், ஏறக்குறைய 80 சதவீத கேள்விகளுக்கு பதிலளித்து வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், வேளாண் துறை சார்ந்த விவசாயிகளின் கேள்விகளுக்கான பதில்களை ஏற்கனவே எம்.பி.3 முறையில் பதிவு செய்து வைத்திருப்பதாகவும், விவசாயிகள் கேள்வி கேட்கும்போது அதற்குரிய பதிலை ஒளிபரப்புவார்கள்.
இந்த கிராம விவசாய மையங்கள் நீண்ட காலம் நீடித்திருக்க விவசாயிகள் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். ஹைதராபாத்தில் உள்ள தேசிய வேளாண்மை விரிவாக்க மையம், விசாட், வீடியோ கான்பரன்சிங் வசதி கொண்ட வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த வாகனம் ஒவ்வொரு கிராமப் பகுதிக்கும் சென்று விவசாயிகளின் தேவைகளை அறிந்து அதற்கு தீர்வு காணும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சில்வஸ்டர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல் நீடிப்பதாகவும், உரிய நிதி ஒதுக்கப்படாததே அதற்குக் காரணம் என்றும் விவசாய வட்டாரத்தில் பேசப்படுகிறது.
நாட்டின் முதுகெலும்பாக உள்ள வேளாண்மைத் துறையின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கினால் மட்டும் போதாது. அந்த நிதி உரிய இடங்களுக்கு உரிய வகையில் போய்ச் சேருகிறதா என்பதை அரசு கண்காணிப்பதுடன், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் ஈடுபட்டுள்ள வேளாண்மைத் துறையில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி ஒரு ஏக்கரில் உற்பத்தி செய்யப்படும் நெல்மணிகளின் அளவை உயர்த்துவதன் மூலமே தொழில்துறை மற்றும் சேவைத் துறையில் நமது இலக்கை எட்ட இயலும்.
வேளாண் துறையில் ஒரு பங்கு உற்பத்தி கூடுதல் என்பது தொழில்துறையிலும், சேவைத் துறையிலும் 2,3 மடங்கு கூடுதல் வர்த்தகத் திறனை அதிகரிக்கும். எனவே அரசு சிறப்புக் கவனத்தை வேளாண் துறைக்கும் தர வேண்டும் என்பதே பெரும்பான்மையான விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.