Publish Date: Mon, 12 Aug 2013 (19:30 IST)
Updated Date: Mon, 12 Aug 2013 (19:28 IST)
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், நாகை மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டுவரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,
தென்மேற்கு பருவமழை தற்போது ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. இதனால் தமிழகத்திலும் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை கடலூர், புதுச்சேரி, நாகை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், தேனி, நெல்லை, கன்னியாகுமரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழையும், திருச்சி, புதுகோட்டை, மதுரை, இராமநாதபுரம், தூத்துக்குடி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
பருவமழை காலத்தில் வங்க கடல் பகுதியை பொறுத்தவரை கடலூர் மாவட்டத்தில் மிக அதிகபட்ச மழை பதிவாக வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் சராசரியைவிட கூடுதல் மழையும், கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், நாகை, திருவாரூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக அதிகபட்ச மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ள தேதிகளாகும். ஆகஸ்ட் 14, 29 நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள தேதிகளாகும் என்று மழைராஜ் குறிப்பிட்டுள்ளார்.