Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை

தரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை
, வியாழன், 21 பிப்ரவரி 2013 (16:22 IST)
FILE
சோற்றுக் கற்றாழை ஒரு தரிசு நிலப்பயிராகும். மழை குறைவான பகுதியில் விவசாயம் சரியான அளவில் நடைபெற முடியாத நிலையில் மூலிகைப் பயிரான சோற்றுக் கற்றாழை பெருமளவில் பயிரிடப்படுகிறது.

சோற்றுக் கற்றாழை அதிகளவில் தரிசுநிலப் பகுதிகளிலேயே பயிரிடப்படுகிறது. ஆஸ்துமா, குடல் புண், உடல் உஷ்ணம் போன்ற நோய்களுக்கு கற்றாழை ஒரு நல்ல மருந்தாகும். இதன் தோல்பகுதியை சீவி எடுத்து, மோர், பாலில் கலந்து குடித்து வந்தால் நோய்கள் குணமாகும். இது ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கும் ஒரு மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது.

இதுதவிர மூலிகை சோப்பு, ஷாம்பு, மருந்து, மாத்திரைகள் தயாரிக்க மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. இதனால் வெளிமாநிலங்களுக்கு பெருமளவில் இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சோற்றுக் கற்றாழையை வாழை சாகுபடியில் பக்க வாழையை எடுத்து நடுவது போன்றே பயிரிட வேண்டும். மூன்று அடிக்கு ஒன்று என்ற விகிதத்தில் சோற்றுக் கற்றாழையை நடலாம். பத்து நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்.
இடைவெளி பயிர் செய்திருப்பதால் நீரை எடுத்துச் சென்று சோற்றுக் கற்றாழைக்கு விடலாம். சொட்டுநீர் பாசனம் இந்த பயிருக்கு உகந்தாகும்.

சோற்றுக் கற்றாழை செழித்து வளர்ந்தால் கீற்றுகள் ஒவ்வொன்றும் 300 கிராம் முதல் 1 கிலோ எடை வரை பருமனாக இருக்கும். 1 கிலோ எடையுள்ள கீற்று ரூ.4 முதல் 5 வரை விற்பனையாகிறது.

களைகள் அதிகம் தேங்கவிடாமல் பார்த்துக் கொண்டால் உரம் போடத் தேவையில்லை. ஓரளவு சாண உரம் இட்டால் போதும். ஒரு முறை சோற்றுக் கற்றாழை நட்டால் ஓராண்டுக்கு பலன் கொடுக்கும். 15 முதல் 20 நாள்களுக்கு ஒரு முறை அதன் கீற்றுகளை மட்டும் அறுவடை செய்யலாம்.

இது வெய்யில் காலத்துக்கு ஏற்ற பயிராகும். மருத்துவக் குணம் மிக்க சோற்றுக் கற்றாழைக்கு பூச்சி மருந்து அடிக்கத் தேவையில்லை. தண்ணீர் வசதியில்லாத கரடுமுரடான இடங்கள், பாறைகள் சூழ்ந்துள்ள இடங்கள் சுண்ணாம்பு பாறைகள் சூழ்ந்துள்ள பகுதிகளில் கூட சோற்றுக் கற்றாழை நன்றாக வளரும்.

இந்த சோற்றுக் கற்றாழை விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக பலன் கொடுக்கும் பயிராக உள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் தரிசு நிலங்களில் அதிகமாக சோற்றுக் கற்றாழை பயிரிடப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil