Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உதகையில் ரோஜா மலர் சர்வதேச கருத்தரங்கு

Advertiesment
உதகையில் ரோஜா  மலர் சர்வதேச கருத்தரங்கு
உதகை: , வெள்ளி, 16 ஜனவரி 2009 (12:38 IST)
உதகையிலுள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 27-வது அகில இந்திய ரோஜாக்கூட்டம் மற்றும் சர்வதேச ரோஜா கருத்தரங்கு நாளை தொடங்குகிறது.

இந்த கருத்தரங்கு மூன்று நாட்கள் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், 27 ரோஜா சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

உதகையிலுள்ள அரசினர் தாவரவியல் பூங்காவில் கடந்த 1995 ஆம் ஆண்டு நூறாவது ஆண்டு மலர்க்காட்சி நடைபெற்றது. இதை சிறப்பிக்கும் வகையில் உதகையில் புதியதொரு ரோஜா பூங்காவை, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார். தோட்டக் கலைத் துறை மூலமாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளால் இப்பூங்காவில் தற்போது 3,800 ரகங்களில் சுமார் 25 ஆயிரம் ரோஜா செடிகள் உள்ளன.

உதகை ரோஜா பூங்கா, உலகிலுள்ள மிகச்சிறந்த ரோஜா பூங்காக்களில், இதுவும் ஒன்றென அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதகை ரோஜா பூங்காவிற்கு "கார்டன் ஆப் எக்சலென்ஸ்'' விருது கிடைத்தது.

உலக ரோஜா சம்மேளனம் வழங்கிய கருத்துக்களை நன்முறையில் செயல்படுத்தியதால், தற்போது இப்பூங்காவில் தமிழகத்திலேயே முதன்முறையாக இந்திய ரோஜா கூட்டம் நடத்தப்படுகிறது.

இதுதொடர்பாக நீலகிரி ரோஜா சங்கத் தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் சங்கரன் ஆகியோர் உதகையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
27 வது அகில இந்திய ரோஜா கூட்டம் மற்றும் சர்வதேச ரோஜா கருத்தரங்கு ஆகியவை ஜன.17-ம் தேதி சனிக்கிழமை காலை துவங்குகின்றன. ரோஜா பூங்கா வளாகத்தில் தமிழக கதர் வாரியத்துறை அமைச்சர் இளித்துரை ராமச்சந்திரன் தொடங்கி வைக்கிறார்.

இதில் தமிழக அரசின் முதன்மை செயலரும, அச்சு மற்றும் எழுதுபொருள் துறை இயக்குநருமான சுர்ஜித் சவுத்ரி, வேளாண்மைத் துறை செயலர் நந்தகிஷோர் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் பாட்டீல் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதையடுத்து கருத்தரங்கு நிகழ்ச்சிகள் உதகையிலுள்ள ஜே.எஸ்.எஸ் பல்கலைக்கழக கூட்டரங்கில் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து 250 க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இந்நிகழ்ச்சிகளின் நிறைவு விழா, 18-ம் தேதி மாலை 4.30 மணியளவில் நடைபெறுகிறது. இதில் இந்திய ரோஜா சங்கத் தலைவர் டாக்டர் அரவிந்த் சாப்ளே சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

இந்த கருத்தரங்குகளில் இந்தியாவில் ரோஜா மலர்கள் சம்பந்தமான பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் இத்தகைய கூட்டம் நடத்தப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் உதகையில் இத்தகைய கூட்டம் நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.

ரோஜா பூங்கா வளாகத்தில் ரோஜா கண்காட்சியும், பார்வையாளர்களுக்கான ரோஜா போட்டியும் நடத்தப்படுகின்றன. நாட்டிலேயே அதிக ரோஜா ரகங்களைக் கொண்ட மிகப்பெரிய ரோஜா பூங்காவான உதகை ரோஜா பூங்காவில் இந்நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் மேலும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இக்கருத்தரங்கின் முடிவில் உதகை ரோஜா பூங்காவில் புதிய ரகங்களிலான ரோஜாக்களும் அறிமுகப்படுத்தப்படுமெனத் தெரிவித்தனர்

Share this Story:

Follow Webdunia tamil