Newsworld Finance Agriculture 0901 06 1090106019_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூடுதல் வருமானத்திற்கு காய்கறி சாகுபடி

Advertiesment
திருப்பூர் நீர்வள நிலவளத்திட்டம் திசுவளர்ப்பு
திருப்பூர் , செவ்வாய், 6 ஜனவரி 2009 (12:04 IST)
திருப்பூர்: கூடுதல் வருமானம் பெற விவசாயிகள் காய்கறி பயிர் சாகுபடி செய்யலாம் என்று தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.

திருப்பூரில் உள்ள உழவர் சந்தைகள், தினசரி மார்க்கெட், தள்ளுவண்டிகள், பழமுதிர் நிலையங்கள் மற்றும் சிறுமளிகைக்கடைகள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 200 டன் காய்கறிகள் விற்பனையாகின்றன.

இதில் பெரும்பாலான காய்கறிகள் திருப்பூரைச் சுற்றியுள்ள 25 கி.மீட்டர் தொலைவில் இருந்தே வருகிறது.

திருப்பூர் வட்டார பகுதிகளில் விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறை, சாகுபடி செலவினம் உயர்வு மற்றும் தானிங்களை சாகுபடி செய்வதால் ஏற்படும் வருமான இழப்பு உள்ளிட்ட பல காரணங்களால் ஏராளமான விவசாய நிலங்கள் தரிசாகக் போடப்பட்டுள்ளன.

இந்த நிலங்களில் காய்கறி, கீரைகள் சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் பெறலாம்.

காய்கறி, கீரைகளின் தேவை அதிகமாக இருப்பதால் விவசாயிகள் தங்கள் நிலத்தில் தக்காளி, கத்தரி, வெண்டை, வெங்காயம், கொடிவகைகளான பாகல், பீர்க்கன், புடலை, கீரைவகைகளை சாகுபடி செய்து அதிக வருமானம் ஈட்டலாம்.

மேலும், காய்கறி சாகுபடியை மேம்படுத்த தமிழக அரசு ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம் மூலம் 50 விழுக்காடு மானிய விலையில் தக்காளி, மிளகாய், வெண்டை, கத்தரி விதைகளை விற்பனை செய்கிறது.

நீர்வள நிலவளத்திட்டம் மூலம் (பி.ஏ.பி பாசன விவசாயிகளுக்கு மட்டும்) தக்காளி, வெண்டை, வெங்காயம் ஆகிய பயிர் சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.15 ஆயிரம் மானியமும், திசுவளர்ப்பு வாழைக்கு ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் மானியமும் அனுமதிக்கிறது.

தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் வாழை சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.7,500, மஞ்சள் சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.11,250, பெருநெல்லி சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.22,500, கோகோ சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.11,250, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்புக்கு ஆயிரம் ரூபாயும் மானியம் வழங்கப்படுகிறது.

நுண்ணீர் பாசானத்திட்டத்தின் மூலம் அனைத்துப் பயிர்களுக்கும் சொட்டு நீர்பாசனம் அமைக்க ஆகும் செலவில் 50% மானியமாக வழங்கப்படுகிறது.

இந்த சலுகைகளை விவசாயிகள் பயன்படுத்தி காய்கறி பயிர் சாகுபடி மூலம் அதிக வருமானம் ஈட்டி பயனடையலாம் என்று திருப்பூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ப.சந்தானகிருஷ்ணன் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil