புது டெல்லி: மரபணு மாற்றப்பட்ட (ஜி.எம்) விதைகளை கொண்டு பயிர்களை வளர்த்து செய்யும் சோதனைக்கு உடனே தடை விதிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் மபீல் ரோபிலோ கூறினார்.
மாநிலங்களவையில் நேற்று பேசும் போது, தனியார் நிறுவனம் மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு சோதனை நடத்துவது விதிகளுக்கு புறம்பானது. இந்த சோதனைக்கு பிறகு, அந்த பயிர்களை எரித்துவிடுவதாக கூறுகின்றது. ஆனால் அங்கு அதே பயிர்கள் மீண்டும் வளர்கின்றன.
இதன் ஆபத்து இந்தியாவில் கணிசமான அளவு நெல் உற்பத்தி செய்யப்படும் மாநிலங்களான ஜார்கண்ட், சத்தீஷ்கர் மாநிலகளின் உள்ளது. மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு வளர்க்கப்படும் பயிர்களால் ஏதேனும் தீங்கு ஏற்பட்டால், அது நெல் உற்பத்தியின் அளவையும். தரத்தையும் கடுமையாக பாதிக்கும்.
சீனா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் மரபணு மாற்றப்பட்ட விதையை பயன்படுத்தி சோதனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
உயிரி தொழில் நுட்பம் பயன் படுத்துவது குறித்து அமைக்கப்பட்டுள்ள எம்.எம்.சுவாமிநாதன் தலைமாயிலான குழு, மற்ற பயிர்கள் பயிரிடப்படும் பகுதிகளில் இருந்து வெகு தொலைவில் மட்டுமே, மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயன்படுத்தும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.
எனவே மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு பயிர்கள் வளர்த்து செய்யும் சோதனைகளுக்கு உடனே தடை விதிக்க வேண்டும் என்று மபீல் ரோபிலோ கூறினார்.
சிரோன்மணி அகாளி தளத்தைச் சேர்ந்த உறுப்பினர் நரேஷ் குஜ்ரால் பேசுகையில், பஞ்சாப் மாநிலத்தில் இட பற்றாக்குறையால், இந்திய உணவு கழகம் கோதுமையை வெட்ட வெளியில் சேமித்து வைத்துள்ளது. இவற்றை சேமித்து வைக்க தனியார் கிடங்குகளை பயன்படுத்திக் கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும்.
பஞ்சாப் மாநிலத்தில் 95 லட்சம் டன் கோதுமை உற்பத்தியாகி உள்ளது. இதை பாதுகாக்க கிடங்கு வசதி இல்லாத காரணத்தினால், இவை கெட்டுப் போகும் ஆபத்து இருக்கிறது. அதே நேரத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பயன்படுத்த தகுந்தாற்போல் தனியாரிடம் பல இடங்கள் உள்ளன என்று கூறினார்.