ராமநாதபுரம்: மிளகாய் பயிருக்கும் பயிர் காப்பீடு செய்யும் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு விவசாயிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் கேட்டுக்கொண்டார்.
தேசிய காப்பீட்டு நிறுவனம் மூலம், நடப்பு ஆண்டில் மிளகாய் பயிரிடும் விவசாயிகளுக்கு வெள்ளம், மழை, புயல், கடும் வறட்சி, பூச்சி மற்றும் நோய் தாக்குதலினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கும் விதமாக பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் திருவாடானை மற்றும் ஆர்.எஸ். மங்கலம் வட்டாரங்கள் நீங்கலாக, மற்ற 9 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் கட்டாயத்தின் பேரிலும், பயிர்க்கடன் பெறா விவசாயிகள் விருப்பத்தின் பேரிலும் சேர்க்கப்படுகின்றனர்.
இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கர் மிளகாய்ப் பயிருக்கு ரூ.12,492 காப்பீடு செய்யப்படுகிறது. இதற்கு கட்டணமாக (பிரிமியம்) காப்பீட்டுத் தொகையில் 9.15 விழக்காடு, ரூ. 1143 செலுத்த வேண்டும்.
வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பிரிமியத் தொகையில் 50 விழுக்காடு, பயிர்க்கடன் பெறாத சிறு, குறு விவசாயிகளுக்கு காப்பீடு தொகையில் 55 விழுக்காடு, பயிர்க்கடன் பெறாத பிற விவசாயிகளுக்கு பிரிமியத்தொகையில் 50 விழுக்காடு அரசால் மானியமாக வழங்கப்படும்.
பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் ஒரு ஏக்கர் மிளகாய் பயிருக்கு ரூ. 572, பயிர்க்கடன் பெறாத சிறு, குறு விவசாயிகள் ரூ. 515 கட்டணமாக செலுத்தி, காப்பீடு திட்டத்தில் பங்கு கொள்ளலாம்.
பயிர்க்கடன் பெறாத இதர விவசாயிகள் ரூ.572 கட்டணமாக செலுத்த வேண்டும். வங்கிகள் மற்றும் தங்கள் பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் பிரிமியம் செலுத்தலாம்.
இந்த திட்டத்தில் சேர கடைசி நாள் 15.3.2009 ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.