Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகளிருக்கு வேளாண் நிலம்

மகளிருக்கு வேளாண் நிலம்
, செவ்வாய், 16 டிசம்பர் 2008 (12:27 IST)
திண்டுக்கல்: தாட்கோ மூலம் நிலமற்ற இந்து ஆதி திராவிட மகளிர் மட்டும் என்.எஸ்.எப்.டி.சி திட்டத்தின் கீழ் வேளாண் நிலம் வாங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் இரா. வாசுகி தெரிவித்துள்ளார்.

தேசிய பட்டியல் இனத்தோர் மேம்பாட்டுக் கழகம் (என்.எஸ்.எப்.டி.சி) திட்டத்தின் கீழ் வேளாண் நிலம் பெற விரும்புவோர் 18 வயது முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். நிலமற்ற விவசாயக் கூலி, சிறு மற்றும் குறு விவசாயிகளாகவும், குடும்ப ஆண்டு வருமானம் கிராமப் புறமாக இருப்பின் ரூ. 18,460, நகர்புறத்தைச் சேர்ந்தோரின் வருமானம் ரூ. 28,536க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விவசாய நிலம் வாங்குவதற்கு மட்டும் (நஞ்சை, புஞ்சை) ரூ.1 லட்சம் நிதி அளிக்கப்படும். இதில் தாட்கோ மானியம் 50 விழுக்காடாகவும், என்.எஸ்.எப்.டி.சி பருவக் கடன் 50 விழுக்காடாகவும் இருக்கும். ஏற்கெனவே, தாட்கோ உதவியுடன் விவசாய நிலம் வாங்கியவர்கள் தற்போது நீர்ப்பாசனம் மற்றும் அபிவிருத்திக்காகவும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துடன் சாதிச் சான்று, வருமானம், குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று நகல்களையும் வாங்க விரும்பும் நிலத்தைப் பயனாளியே தேர்வு செய்து நிலச் சொந்தக்காரருடன் விலை பேசி ரூ. 20 க்கான முத்திரை தாளில் (பதிவு செய்யாத விற்பனை ஒப்பந்தக் கடித நகல்) வாங்கும் நிலத்துக்கான சிட்டா, அடங்கல், பட்டா, புத்தக நகல், வரைபடம், வில்லங்கச் சான்று, மூலப்பத்திர நகல் மற்றும் சட்ட ஆலோசகர் கருத்து ஆகியவையும் இணைக்க வேண்டும்.

நிலம் கொடுப்பவர் ஆதி திராவிட இனத்தைச் சேர்ந்தவராக இருத்தல் கூடாது.

வாங்க உத்தேசித்துள்ள நிலத்துக்கு சந்தை மதிப்பீடு அல்லது அரசு வழிகாட்டி மதிப்பீடு இதில் எது குறைவோ அதன் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியங்கள் தவிர, பிற ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் நிலம் வாங்குபவர்கள் ஏற்கெனவே நிலத்தில் கிணறு மற்றும் போர்வெல் ஆகிய நீர்பாசன வசதி உள்ள நிலமாகத் தேர்வு செய்வது அவசியம். நிலமற்ற விவசாயி மற்றும் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் 75 விழுக்காடு விலக்கு அளிக்கப்படும்.

விண்ணப்பங்கள் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அல்லது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரக அலுவலக தாட்கோ அலுவலகங்களில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களை 2 நகல்களில் பூர்த்தி செய்து பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி தேவையான சான்று நகல்களை இணைத்து வரும் டிச. 26 ஆம் தேதிக்குள் மாவட்ட மேலாளர் தாட்கோ, மாவட்ட ஆட்சியரகம், திண்டுக்கல் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி பயனடையும்படி ஆட்சியர் இரா. வாசுகி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil