Publish Date: Wed, 10 Dec 2008 (16:30 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:46 IST)
சேலம்: சேலம் மாவட்டத்தில் உழவர் சந்தைக்கு அருகே தனியார் காய்கறி வியாபாரிகள் கடை வைக்கக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் ஜெ.சந்திரகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உழவர் சந்தை அருகே தனியார் வியாபாரிகள் காய்கறி கடை அமைத்து, விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை வழிமறித்து பெற்று அதிக லாபத்துக்கு விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்துள்ளது.
அரசாணைப்படி உழவர் சந்தையின் அருகில் 100 மீட்டர் சுற்றளவில் தனியார் வியாபாரிகள் காய்கறிகள் விற்பனை செய்யக்கூடாது. அதன்படி சேலம் மாவட்டத்தில் அனைத்து உழவர் சந்தைகளிலும் 100 மீட்டர் அளவுக்குள் தனியார் வியாபாரிகள் காய்கறிகள் வியாபாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதை மீறி விற்பனை செய்வோரின் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நாள்தோறும் உழவர் சந்தைகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் ஜெ.சந்திரகுமார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.