திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் சூறைக் காற்றால் வாழைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என பா. வேல்துரை எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கு, அனுப்பியுள்ள மனுவில், சேரன்மகாதேவி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கல்லிடைக்குறிச்சி, கரம்பை, வீரவநல்லூர், கிரியம்மாள்புரம், அத்தாளநல்லூர், அரிகேசவநல்லூர், திருப்புடைமருதூர், கூனியூர், காருகுறிச்சி, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளங்குழி ஆகிய கிராமங்களில் கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி ஏற்பட்ட சூறாவளியால் சுமார் 20 லட்சம் வாழைகள் சேதமடைந்தன.
இந்த வாழைகள் அனைத்தும் வெட்டக் கூடிய பருவத்தில் இருந்ததால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, விவசாயிகளின் நிலையை கருத்தில்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.