Publish Date: Thu, 27 Nov 2008 (15:53 IST)
Updated Date: Thu, 27 Nov 2008 (15:52 IST)
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் (அக்டோபர்) பெய்த பலத்த மழையால் 95.83 ஹெக்டேரில் நெல் பயிர் சேதமடைந்துள்ளது.
அதே நேரத்தில், சமீபத்தில் பெய்த மழைக்கு நெற் பயிர் சேதமில்லை என்று மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரகுமார் தெரிவித்தார்.
நாகர்கோவிலில், புதன் கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த அக்டோபர் மாதத்தில் பெய்த மழைக்கு 95.83 ஹெக்டேரில் நெல் பயிர் 50 விழுக்காட்டிற்கும் மேல் சேதமடைந்துள்ளது. 10 ஹெக்டேரில் 50 விழுக்காட்டிற்கும் குறைவாக சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் 394 விவசாயிகள் பாதிக்கப்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 8526 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, அதிகபட்சமாக ஹெக்டேருக்கு 10.75 டன் மகசூல் எடுக்கப்பட்டுள்ளது. 3,230 ஹெக்டேரில் செம்மை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தற்போது 5,800 ஹெக்டேரில் கும்பப் பூ சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Thu, 27 Nov 2008 (15:53 IST)
Updated Date: Thu, 27 Nov 2008 (15:52 IST)