மதுரை: மதுரை மாவட்டத்தில் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேதம் பற்றி உடனடியாக கணக்கெடுப்பு நடத்த வேளாண் துறை, வருவாய்த் துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் பெ. சீத்தாராமன் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் பயிர் சேதம் குறித்து ஒவ்வொரு கிராமத்திலும் வருவாய் ஆய்வாளர் மற்றும் வேளாண் அலுவலர் இணைந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு கையெழுத்திட்டு தாக்கல் செய்ய வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் 946 கண்மாய்களில் 80 விழுக்காடு நிரம்பியுள்ளன. மதுரையில் ஆனையூர், கரிசல்குளம், விளாங்குடி ஆகிய மறுகால் வாய்க்கால்கள் 8 கி.மீ. தூரத்திற்கு, கடந்த வெள்ளச் சேதத்திற்குப் பின் ரூ.14 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தப் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை.
அத்துடன், மாவட்டத்தில் பருவமழை பெய்துவரும் நிலையில் சாகுபடி செய்துள்ள பயிரை விவசாயிகள் கண்காணித்து வரவேண்டும். நடவு செய்யப்பட்ட வயல்களிலிருந்து நீரை வடித்துவிட வேண்டும். மழை நின்றவுடன் பயிர்களுக்கு சிபாரிசு செய்யும் உரத்தைவிட, கூடுதலாக 25 விழுக்காடு யூரியாவை மேலுரமாக இட வேண்டும்.
நடவு செய்யப்படவுள்ள வயல்களில் நன்கு வளர்ச்சியடைந்த நாற்றுகளை குத்து, குத்தாக 4,5 நாற்றுகளாக நெருக்கி நடவு செய்ய வேண்டும். நாற்றுகள் அதிகம் வளர்ந்திருப்பின் அவற்றின் நுனியைக் கிள்ளிவிட்டு நடவு செய்யவேண்டும்.
மழையால் இளம்நடவு அடித்துச் செல்லப்பட்டிருந்தால் உபரி நாற்றுகள் கிடைக்காதபோது முளைவிட்ட விதைகளை நேரடி விதைப்பு செய்யலாம். இதற்கு ஏக்கருக்கு 30 கிலோ விதை பயன்படுத்துவதன் மூலம் பயிரின் மகசூலை நிலைப்படுத்தலாம்.
தற்போது மழையின் அளவு அதிகரித்து வருவதால் பூச்சி தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, பயிரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தேவையான உரங்களை அனைத்து கூட்டுறவு ஒன்றியங்களிலும் பெறலாம். இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் தங்கள் பகுதியில் உள்ள உதவி இயக்குநர், தரக் கட்டுப்பாடு அல்லது வேளாண்மை இணை இயக்குநரை (செல்: 97909 02204) தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.