தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் எஸ். கண்ணையன் தலைமையில் அமைக்கப்பட்ட வேளாண் வல்லுநர் குழு தனது அறிக்கையை வருகிற டிசம்பர் மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.
தொழில்நுட்பங்களின் முழுத் திறனையும் பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக ஆராயத் தமிழக அரசு அமைத்துள்ள 7 பேர் கொண்ட குழுவின் ஐந்தாவது கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அக்குழுவின் தலைவர் எஸ்.கண்ணையன் கூறியதாவது:
தமிழக அரசின் பல்வேறு விவசாயிகள் நலத் திட்டங்கள், பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களில் உள்ள குறைபாடுகள், இலக்குகளை அடைவதில் விவசாயிகளும் அதிகாரிகளும் சந்திக்கும் பிரச்சனைகள், சேவைகள் விரிவாக்கம், தொழில்நுட்ப மாற்றம் ஆகியவை குறித்து இந்தக் குழு விரிவாக ஆராய்ந்து வருகிறது.
விவசாயிகள், தோட்டக்கலைத் துறையினர், வல்லுநர்கள், பொறியாளர்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், வேளாண் விஞ்ஞானிகள் ஆகிய பல்வேறு தரப்பினரிடமும் விவாதித்துள்ளோம்.
இதனடிப்படையில் இறுதி அறிக்கை டிசம்பர் மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.
வெள்ளத்தால் பயிர்களை இழந்து பெரும் இழப்பைச் சந்தித்துள்ள விவசாயிகள் தங்களுக்கு உரிய காப்பீட்டுத் தொகையை உரிய காலத்தில் பெற முடியாத வகையில் பயிர்க் காப்பீட்டுத் திட்ட விதிகள் கடுமையாக உள்ளதால், அவற்றை எளிமைப்படுத்த வேண்டும் என்று குழு பரிந்துரைக்கவுள்ளது.
பயிர்ச் சோதனை முறைகள், அதற்கான இழப்பீடு தொடர்பாகவும் பல்வேறு முக்கியப் பரிந்துரைகளை நாங்கள் முன்வைப்போம்.
மேலும், விவசாயக் கடன்களை அதிகரிக்க வேண்டும், உவர் நீர்நிலைகளை நன்னீராக்கும் திட்டங்கள், புதிதாகக் குளங்கள் மற்றும் தடுப்பணைகளைக் கட்டுதல், கூலி ஆட்கள் பற்றாக்குறையால் பயிரிழப்பைத் தடுக்க கருவிகள் அறிமுகம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளையும் நாங்கள் முன்வைக்கவுள்ளோம்.
இவ்வாறு கண்ணையன் தெரிவித்தார்.