சேலம்: கரும்பு விலையை டன்னுக்கு ரூ.2 ஆயிரமாக அதிகரிக்க வலியுறுத்தி விவசாயிகள், குறைகேட்பு நாள் கூட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்தன்ர்.
சேலம் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதற்கு வேளாண்மைத் துறை இணை இயக்குநர் மாணிக்கம் தலைமை வகித்தார்.
குறைகேட்பு நாள் கூட்டம் தொடங்கியதும், ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் வையாபுரி, தமிழக விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலர் சுந்தரம் ஆகியோர் பேசினார்கள்.
அப்போது அவர்கள் கரும்பு விலை டன்னுக்கு ரூ.2 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இவர்களுக்கு ஆதரவாக கூட்டத்தில் அமர்ந்திருந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், குறை கேட்பு நாள் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கரும்பு விலை பற்றி தமிழக விவசாயிகள் சங்க பொதுச்செயலர் சுந்தரம் கூறியதாவது.
தமிழகத்தில் 37 சர்க்கரை ஆலைகள் உள்ளன. ஒரு ஏக்கரில் கரும்பு சாகுபடிக்கு ரூ.35 ஆயிரம் வரை செலவாகிறது.
ஒரு ஏக்கரில் சராசரியாக 40 டன் கரும்புதான் மகசூல் எடுக்க முடியும். இதனால், அரசு அறிவித்துள்ள விலை கட்டுபடியாகாது. மாநில அரசு ஏற்கெனவே டன்னுக்கு ரூ.1,034 விலை நிர்ணயம் செய்துள்ளது.
மத்திய அரசு அமைத்த விவசாய பொருள்கள் விலை நிர்ணயக் குழு கரும்பு டன்னுக்கு ரூ.1,550 வைர வழங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இத்துடன் மாநில அரசு ரூ.450 சேர்த்து ரூ. 2 ஆயிரமாக நிர்ணயிக்க வற்புறுத்தி வருகிறோம்.
கரும்பு விலையை அதிகரிக்க வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் வருகின்ற 7 ஆம் தேதி சர்க்கரை ஆலைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.