சென்னை: வேளாண்மைப் பணியில் தேவைப்படும் அனைத்து இடுபொருட்கள் மற்றும் தேவைகளும் ஒரே இடத்தில் விவசாயிகளுக்கு கிடைக்கச்செய்யும் வகை யில் 385 வட்டாரங்களில் வேளாண் ஆலோசனை மற்றும் சேவை மையத்தினை அமைக்க தமிழக அரசு ஆணை வழங்கியுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தின் வேளாண்மையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
ரூ.33 கோடி செலவில் வேளாண் ஆலோசனை மையம், பண்ணை இயந்திர சேவை மையம், விதை சுத்திகரிப்பு மையம் அமைக்கும் மூன்று முக்கிய திட்டங்களின் உதவிகள் ஒருங்கிணைக்கப்படும்.
இவை உரம், பூச்சிக்கொல்லி மருந்து, நுண்ணீர் பாசன உபகரணங்கள் மற்றும் சான்று விதைகள் ஆகிய இடுபொருட்களை விவசாயிகளுக்கு விநியோகம் செயுயம் மையங்களாகவும் செயல்படும்.
இது குறித்து வேளாண்மைத் துறை செயலர் சுர்ஜித் கே.
சௌத்ரி கூறுகையில், வேளாண்மை தொழிலை பொருளாதார ரீதியாக, இலாபம் தரக்கூடிய வணிகத்தொழிலாக மேம்படுத்துவதே அரசின் எண்ணம்.
தற்போது வேளாண்மை மூலம் இலாபம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
வேளாண்மையை அறிவியல் ரீதியாக மேற்கொண்டால், கிராமப்புற மக்களுக்கு பெரிய அளவில் வேலைவாய்ப்பினை வேளாண்மைத் தொழிலினால் வழங்க முடியும். அத்துடன் ஒருங்கிணைந்த வேளாண்மை வணிக மையங்களின் மூலம் அதிக அளவில் வருமானம் பெறமுடியும்.
மகாராஷ்டிராவில் இதுபோன்று இயங்கிவரும் மையங்கள் ஒவ்வொன்றும் 100 பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கி வருகின்றது.
இந்த மையங்களில் மண் பரிசோதனை முதல், கதிரடிக்கும் இயந்திரம் வாடகைக்கு பெறுதல்வரை
விவசாயிகளின் அனைத்து தேவைகளையும் விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்வதே தமிழக அரசின் நோக்கம் என சௌத்ரி தெரிவித்தார்.
முன்பு வேளாண் ஆலோசனை மையங்கள் அமைக்க வேளாண்மை பட்டதாரிகள் மட்டுமே தகுதியானவர்கள் என விதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இந்த விதி இப்போது தளர்த்தப்பட்டு, இம்மையங்களுக்கான உதவிகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அரசின் தற்போது நிர்ணயித்துள்ள புதிய விதிமுறைகளின்படி, வேளாண்மை அல்லது அதன்
தொடர்பான கல்வியில் பட்டம்பெற்ற மற்றும் பட்டயப்படிப்பு தகுதி உள்ளவர்கள், இவ்வேளாண் வணிக மையங்களை அமைக்க முன் வரலாம்.
அத்துடன் ஓய்வு பெற்ற விஞ்ஞானிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் வேளாண்மைத்துறை தொழில்நுட்ப அலுவலர்களும் இம்மையங்களைத் தொடங்க தகுதியானவர்கள்.
இம்மையங்களைத் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களும் தொடங்கலாம். இந்த திட்ட வரைமுறைகளின்படி, வேளாண் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்ட பின், அம்மையத்தை அமைத்தவர் விண்ணப்பத்தின் அடிப்படையில் அரசு மானியமாக ரூ.3 லட்சம் வழங்குகிறது.
டிராக்டர், பவர் டில்லர், லேசர் மூலம் நிலம் சமப்படுத்தும் இயந்திரம், உழிக்கலப்பை, விதை விதைக்கும் இயந்திரம், அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தும் கதிரடிக்கும் இயந்திரம் போன்ற பண்ணை இயந்திரங்களை வாங்குவதற்கு குறைந்தபட்சம் ரூ.16 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு அரசு, மானியமாக ரூ.4 இலட்சம் வழங்கும்.
மேலும் விதை சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் விதை நேர்த்தி மையம் அமைக்க குறைந்தபட்சம் ரூ.21.50 லட்சம் முதலீடு செய்தால், அரசு மானியமாக ரூ.7.5 இலட்சம் வழங்கப்படும்.
இம் மூன்று மையங்களையும் அமைக்கும் தனி நபருக்கு அல்லது முகமைக்கு நுண்ணீர் பாசன கருவிகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், சான்று விதைகள் போன்ற இடுபொருட்களையும் விற்பனை செய்ய தகுதியானவர்களாக கருதி அனைத்து உரிமங்களும் வழங்கப்படும்.
இடுபொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இத்தகைய வேளாண் வணிக மையங்களை தங்கள் இடுபொருட்களை விற்பனைசெய்யும் நிலையங்களாக நியமிக்க அறிவுறுத்தப்படுவார்கள் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.