Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கனமழையால் நெற் பயிர் பாதிப்பு!

கனமழையால் நெற் பயிர் பாதிப்பு!
, புதன், 15 அக்டோபர் 2008 (10:11 IST)
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிரபாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரால், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தாலுகாக்கள், கடலூர் தாலுகாவில் சில கிராமங்கள் பாசன வசதி பெறுகிறது.

வடகிழக்கு பருவமழை காலதாமதமாக தொடங்கினாலும், இந்த மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாகப் மழை பெய்து வருகிறது. இந்த மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் நெல் நாற்று நடம் பணி நடக்க வேண்டும்.

இந்த நிலையில் இங்கு கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் மழையால், ஒரு வாரத்திற்கு முன்பு நடவு முடிந்த வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பயிர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

இது குறித்து கொள்ளிடம் கீழ் அணைப் பாசன விவசாயிகள் சங்கச் செயலாளர் விநாயகமூர்த்தி கூறியது:

இந்த மாவட்டத்தில் காவிரி நீர் பற்றாக்குறையால், 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நாற்று நடவேண்டியது உள்ளது. திருநாரையூர், சர்வராஜன் பேட்டை, செங்கழுநீர்ப் பள்ளம், சிறகிழந்த நல்லூர், கண்டமங்கலம், குறுங்குடி, எடையாறு உள்ளிட்ட கிராமங்களில், ஒருவாரமாக நடப்பட்ட 10 ஆயிரம் ஏக்கரில் தண்ணீர் தேங்கி, பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்த வருடம் காவிரி நீர் தாமதம் ஆனதால், கடைமடைப் பகுதிகளில் உள்ள சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் ஒரு வாரத்திற்கு முன்பு தான் சம்பா நெல் நடவு தொடங்கி உள்ளது.

இதில் நடவு முடிந்துள்ள சுமார் 20 ஆயிரம் ஏக்கர் வயல்களில் மழைநீர் தேங்கி பயிர் மூழ்கிக் கிடக்கின்றன.

வயல்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசனப் பகுதிகள் உள்ளிட்ட 30 ஆயிரம் ஏக்கரில் இன்னும் நாற்று நடவு தொடங்க வில்லை.

தற்போது பெய்து வரும் மழை தொடர்ந்து நீடித்தால், நடவு பணிகள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil