ஈரோடு மாவட்டத்தில் கடும் மூடுபனி : நெற்பயிர்களுக்கு பாதிப்பு!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி!
ஈரோடு மாவட்டத்தில் இன்று அதிகாலை கடும் மூடுபனி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டத்தில் கடந்த பத்து நாட்களாக கடுமையான வெப்பம் வீசி வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். மேலும் தொடர் மின்வெட்டின் காரணமாக வயல்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகளும் சிரமப்பட்டனர்.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் தற்போது ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர் வறண்டு போகும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த மழையின் காரணமாக வறண்டு போகும் நிலையில் இருந்த நெற்பயிர் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதேசமயம் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியடைய தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு மேல் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் மூடுபனி நிலவியது. இதனால் அதிகாலையில் எழுந்து நடைபயிற்சியில் ஈடுபடுவோர் மற்றும் பால் வியாபாரிகள் மல்லிகை பூ விவசாயிகள் என பல்வேறு தரப்பினர் பாதிப்படைந்தனர்.
அதேசமயம் தற்போது நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிருக்கு இந்த மூடுபனி எதிரியாகும். காரணம் நெற்பயிரின் வளர்ச்சியை மூடுபனி தடுக்கும் என்பதால் விவசாயிகளுக்கு சற்று கவலை ஏற்பட்டுள்ளது.