உருளைகிழங்கு உற்பத்தி பாதிப்பு: விவசாயிகள் கவலை!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி!
சத்தியமங்கலம் மலைப்பகுதியில் தொடர் மழையின் காரணமாக உருளைகிழங்கு செடி அழுகிவிட்டது. இதனால் நடப்பு ஆண்டில் உருளைகிழங்கு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஈரோடு சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மலைப்பகுதி. இது கடல் மட்டத்தில் இருந்து 1105 அடி உயரமாக உள்ளது. இங்கு பெருபான்மையான நாட்கள் மூடுபனியில் மூழ்கியிருக்கும். எப்போதும் இதமான தட்பவெப்ப நிலை இங்கு நிலவுவதால் இதை குட்டி கொடைக்கானல் என்று அழைப்பார்கள்.
திம்பம், காளிதிம்பம், பெஜலட்டி, ஆசனூர், மாவள்ளம், கோட்டாடை, குழியாடை, கேர்மாளம் உள்ளிட்ட கிராமங்களில் மலைப்பகுதி விவசாயமான முட்டைகோஸ், உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் விவசாயம் செய்துள்ளனர்.
இதிலும் உருளைகிழங்கு அதிகமாக பயிரிட்டு தற்போது அறுவடை நடந்து வருகிறது. நடப்பு ஆண்டில் கடந்த சில மாதங்களாக ஆசனூர் மலைப்பகுதியை சுற்றிலும் தொடர் மழை பெய்தது. இதனால் உருளைகிழங்கு வயலில் தண்ணீர் தேங்கி உருளைகிழங்கு செடி அழுகிவிட்டது.
இதனால் நடப்பு ஆண்டில் உருளைகிழங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் வயலுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான விதைகிழங்கு நடவு செய்ய வேண்டியுள்ளது. நான்கு மாதங்களில் மகசூல் கொடுக்கும் இந்த கிழங்கு வயலை பராமரிக்க மொத்தம் ரூ.12 ஆயிரம் செலவாகிறது.
கடந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு 7 டன் உருளைகிழங்கு கிடைத்தது. கிலோ ஒன்று ரூ.10 க்கு விற்பனையானது.
நடப்பு ஆண்டில் உருளைகிழங்கு கிலோ ரூ.12 வரை விற்பனையானது. ஆனால் விளைச்சல் ஒரு ஏக்கருக்கு 3 டன் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் உருளைகிழங்கு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கிராம வனக்குழு மூலம் விதைக்கு வட்டியில்லாத கடன் கொடுத்தனர்.இதனால் நஷ்டத்தின் அளவு குறைந்துள்ளதாக தெரிவித்தனர்.