Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேசிய கோழி வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டுகோள்!

தேசிய கோழி வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டுகோள்!
நாமக்கல்: கோழிப் பண்ணைகளை பாதுகாக்க தேசிய கோழி வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளிடம் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த சங்க பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்கான தீர்மானம் சங்கத் தலைவர் ஆர். நல்லதம்பி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

"பறவைக் காய்ச்சல் பீதியால் பாதிக்கப்பட்டதைவிட தீவன விலையேற்றத்தால் கோழிப் பண்ணைத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தீவனமூலப் பொருட்களின் விலை இருமடங்கு உயர்ந்துவிட்டது. சோயா புண்ணாக்கு, மக்காச் சோளம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதனால், முட்டையின் உற்பத்தி செலவு ரூ. 2.10 காசுகளாக அதிகரித்துள்ளது

அதுமட்டுமின்றி கோழிப் பண்ணையாளர்கள் வங்கியில் கடன் பெற்று தொழில் நடத்துவதால் மாதந்தோறும் வட்டி, அசல் கட்டுவதற்கான செலவும் உள்ளது. இதைக் கணக்கிடும்போது தற்போதுள்ள முட்டை விலை பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. முட்டை விலை ரூ 2.40 காசுகளாக இருந்தால் மட்டுமே பண்ணையாளர்களை காப்பாற்ற முடியும்.

எனவே, கோழிப் பண்ணைகளுக்கு வழங்கப்பட்ட கடன் வட்டியில் 6 விழுக்காடு தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயக் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், கோழிப் பண்ணைகளுக்கு விவசாயக் கடனாக வழங்கப்பட்ட தொகையை தள்ளுபடி செய்ய வங்கிகள் மறுத்து வருகின்றன.

இந்த பிரச்னையில் மத்திய நிதியமைச்சர் தலையிட்டு, கோழிப் பண்ணையாளர்களுக்கான கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நீண்டகால தவணையில் கூடுதலாக கடனுதவி வழங்க வேண்டும்.

காஃபி, மீன், பால் ஆகியவற்றுக்கு தேசிய அளவில் நிறுவனம் அமைத்துள்ளதைப் போன்று கோழிப் பண்ணைகளை பாதுகாக்க தேசிய கோழி வளர்ச்சி வாரியம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

தினசரி முட்டை விலை நிர்ணயம் செய்வதாக அறிவித்துள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவுக்கு பண்ணையாளர்கள் ஆதரவளிப்பது' எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் செயலாளர் வைகை கே. தங்கமுத்து, நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் டாக்டர் பி. செல்வராஜ் ஆகியோர் பேசினார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil