தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் நவீன தொழில்நுட்பத்தை கையாண்டு, அதிக அளவு நெல் உற்பத்தி செய்துள்ளனர்.
குறுவை பருவ நெல் அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் கிடைத்திருக்கும் உயர் மகசூலினால், விவசாயிகள் மீண்டும் பெரும் மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் பெற்றுள்ளனர்.
இதுவரை ஹெக்டேருக்கு 5.40 டன் சராசரியாக நெல் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தியதால் ஏக்கருக்கு ஏழரை டன் வரை மகசூல் கிடைத்துள்ளது.
இந்த சாதனை பற்றி வேளாண்மை துறை ஆணையர் எஸ். கோசலராமன் கூறுகையில், இச்சாதனை மாநிலத்தின் வரலாற்றில் இதுவரை அடைந்திராத ஒன்று என்று தெரிவித்தார்.
சென்ற ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகாவில் உள்ள எம்.கணேசன் என்ற விவசாயி ஹெக்டேருக்கு 14.27 டன் மகசூல் எடுத்து சாதனை படைத்தார்.
விழுப்புரம் மாவட்டம், சின்னச்சேலம் பகுதியைச் சேர்ந்த டி. இளங்கோவன் என்ற மற்றொரு விவசாயி 13.38 டன் மகசூல் எடுத்துள்ளார்.
இந்த சாதனை பற்றி கணேசன் கூறுகையில், “ செம்மை சாகுபடி தொழில்நுட்பம் எனக்கு மிகவும் புதியது. எனது வயலில் அனைத்துச் சாகுபடி முறைகளையும் வேளாண்மை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்தனர்.
இத்தகைய புதிய தொழில்நுட்பம் பற்றி, வேளாண்மை அலுவலர்கள், விவசாயத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அளித்த பயிற்சி பெரும் சவாலாக இருந்தது. இத்தகைய முயற்சிகளின் பலனாக, அறுவடை சமயத்தில் அதிக மகசூல் மூலம் பெற்றோம்'' என்று தெரிவித்தார்.
அவர் நடப்புப் பருவத்தில், முந்தைய சாதனையைவிட அதிகமாக பெற அனைத்து முயற்சிகளையும் எடுத்ததாகவும், “ ஆனால் அறுவடை சமயத்தில் பெய்த மழையினால் பயிர் பாதிக்கப்பட்டு, நெல் மணிகள் உதிர்ந்து விட்டது. இந்நிலையிலும் ஹெக்டேருக்கு 10.50 மெ.டன் எடுத்துள்ளேன். இதுவே நல்ல மகசூல் தான்'' என கணேசன் தெரிவித்தார்.
மாநிலத்தின் இதர பகுதிகளிலும் இருந்தும் இதே மாதிரியான உயர்ந்த மகசூல் பெறப்பட்டது பற்றிய செய்திகள் வந்திருக்கின்றன.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியைச் சார்ந்த எஸ். முருகன், டி.காந்தி என்ற இருவிவசாயிகள் ஹெக்டேருக்கு முறையே 9.74, 9.44 மகசூல் எடுத்துள்ளனர்.
நெல்லுக்கான கொள்முதல் விலையினை மாநில அரசு டன்னிற்கு ரூ.1000 என உயர்த்தி உள்ளது. இதனால் இரண்டு ஹெக்டேர் பரப்பில் நெல் பயிரிட்டுள்ள விவசாயி முருகனுக்கு சுமார் ரூபாய் இரண்டு இலட்சம் வரை வருமானம் கிடைக்கும்.
இதைக் கொண்டு குழந்தைக்கு நகைகள் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், கடனாகப் பெற்ற ரூ.40 ஆயிரத்தை திரும்ப அடைப்பேன் எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
காந்தி என்ற விவசாயி வசதியானவர். இவர் அதிகப் பரப்பில் சாகுபடி செய்பவர். நெல்லின் மகசூலினை கண்காணிப்பதற்காக, வேளாண்மைத்துறையும், புள்ளியியல் துறையும் இவரது வயலை ஏதேச்சை முறையில் தேர்வு செய்துள்ளனர்.
இவரின் நிலத்திற்கு அருகில் நிலம் உள்ள ஜான் செல்லையா என்ற விவசாயி, ஹெக்டேருக்கு 10.4 டன் மகசூல் எடுத்துள்ளார். இவரின் வயல் ஏதேச்சை முறையில் தேர்வு செய்யப்பட்டாததால் இந்த மகசூல் பதிவு செய்யப்படவில்லை என வேளாண்மை உதவி இயக்குநர் டி.பாரத் தெரிவித்தார்.
இத்தகைய சாதனைக்கு முக்கிய காரணம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும், வேளாண்மைத்துறை அலுவலர்களும், விவசாயிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டதே என்று கூறலாம்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் செம்மை நெல் சாகுபடி தொழில்நுட்பத்தில் அனுபவம் வாய்ந்த ஆராய்ச்சியாளரான பி.ஜே. பாண்டியன் கூறுகையில், மாநிலத்தில் நடப்பு குறுவைப் பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள 3.21 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில், ஏறக்குறைய 1.51 இலட்சம் ஹெக்டேர் பரப்பில் செம்மை நெல் சாகுபடி தொழில்நுட்ப முறை பின்பற்றப்பட்டுள்ளது.
இத்தொழில்நுட்பத்தில், சான்று விதைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. 15 நாட்கள் வயதுடைய நெல் நாற்றுகள் மட்டுமே நடவு செய்யப்பட்டது.
பொதுவாக, ஒரு குத்துக்கு 4 முதல் 5 நெல் நாற்றுகளை விவசாயிகள் நடுவார்கள். செம்மை தொழில்நுட்பத்தில் குத்துக்கு ஒரேஒரு நெல் நாற்று மட்டுமே நடப்படுகிறது. வரிசைக்கு வரிசை போதிய இடைவெளி விடப்படுகிறது.
பாசன நீர், உரம், பூச்சி மருந்துகள் பயிரின் தேவைக்கேற்ப மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது. வழக்கமான சாகுபடி முறையில் 30 முதல் 40 தூர்கள் மட்டுமே பிடிக்கும். ஆனால், இத்தொழில்நுட்பத்தில் ஒரு நாற்றிலிருந்து 60 முதல் 70 தூர்கள் வந்து அபார விளைச்சல் கிடைக்க வழி செய்கிறது. சுருக்கமாக சொன்னால் இம்முறையினால் சாகுபடி செலவு ரூ.3000 முதல் ரூ.4000 வரை ஹெக்டேருக்கு குறைகிறது.
அத்துடன் மகசூல் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு கிடைக்கிறது. செம்மை நெல் சாகுபடி தொழில்நுட்பம் பின்பற்றப் படாத வயல்களிலும்கூட, சான்று விதை, களையெடுக்கும் கருவி உபயோகப்படுத்தியதால் அதிகமாக மகசூல் கிடைத்துள்ளது.
இந்த வெற்றிக்கான வழிமுறைப் பற்றி வேளாண்மைத்துறை செயலர் சுர்ஜித் கே.சௌத்ரி கூறுகையில், “விவசாயிகளை அதிகளவில் தொடர்பு கொள்ளும் வகையில் வேளாண்மைத்துறை மறுசீரைமைக்கப்பட்டு, மாநிலம் மற்றும் மாவட்ட தலைமையிடங்களிலிருந்து 8,000 க்கும் அதிமான அலுவலர்கள் கிராமப் புறங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் வேளாண்மை பல்கலைக் கழகம் உருவாக்கிய புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடையே பிரபலப்படுத்தியுள்ளனர். செம்மை நெல் சாகுபடி தொழில்நுட்பம் மட்டுமல்லாது, துல்லிய பண்ணைய முறை போன்ற அறிவியல் ரீதியான தொழில்நுட்ப முறைகளை விரிவாக்க அலுவலர்கள் விவசாயிகளிடையே பிரபலப்படுத்தி வருகின்றனர். வேளாண்மைத் தொழிலை ஒரு நிலையான வளமான மற்றும் அதிக லாபம் தரும் தொழிலாக மாற்றுவதே எங்கள் நோக்கம்“ என்று தெரிவித்தார்.