Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உணவுப் பற்றாக்குறை ஏற்படாது!

உணவுப் பற்றாக்குறை ஏற்படாது!
, புதன், 17 செப்டம்பர் 2008 (14:03 IST)
தமிழகத்தில் இந்திய உணவுக் கழகத்தில் போதுமான அளவு அரிசி கையிருப்பு உள்ளதால் உணவுப் பற்றாக்குறை ஏற்படாது என்று இந்திய உணவுக்கழக தென்மண்டல செயல் இயக்குநர் எஸ்.எஸ்.பட்டுவா தெரிவித்தார்.

உதகையில் செய்தியாளர்களிடம் நேற்று எஸ்.எஸ்.பட்டுவா பேசும் போது:

2007-08ஆம் நிதி ஆண்டில் நெல் 274 லட்சம் டன்னும், கோதுமை 226 லட்சம் டன்னும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்திய உணவுக் கழகத்தின் சார்பில் 29 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இவற்றில் 54 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையும், 6.76 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் கையிருப்பில் உள்ளது.

ஒவ்வொரு மாதமும் 3 லட்சம் டன் அரிசியும், 9 ஆயிரம் டன் கோதுமையும் அரசின் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படுகிறது. தற்போதுள்ள நிலவரப்படி அடுத்த இரு மாதங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் இருப்பில் உள்ளது.

உணவுப்பொருட்களை வெளியிலிருந்து கிடங்குக்கு கொண்டுவரும் போதும், வெளி இடங்களுக்கு கொண்டு செல்லும் போதும் ஏற்படும் இழப்பு மாநிலத்திற்கு, மாநிலம் வேறுபடுகிறது. இது தமிழகத்தில் 0.26 சதம் இழப்பாக உள்ளது. இதையும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய உணவுக்கழகம் எடுத்து வருகிறது.

இந்திய உணவுக்கழகம் பஞ்சாப், அரியானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்து அரிசி மற்றும் கோதுமை கொள்முதல் செய்து தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களுக்கு விநியோகிக்கிறது.

உணவுப்பொருட்கள் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும்போது அவை கனிணி மூலம் முழுமையாக கண்காணிக்கப்படுகிறது. கிடங்குளில் உள்ள பொருட்களுக்கு இந்திய உணவுக்கழகமே பாதுகாப்பு என்றாலும், கிடங்கில் வெளியே சென்றால், அதற்கு அரசு அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

உணவுப்பொருட்களை கடத்துவோர் குறித்து கிடைக்கும் தகவல்களை அரசு அதிகாரிகளுக்கு தெரிவித்து விடுகிறோம். அதனால் அரிசி கடத்தலுக்கும், இந்திய உணவுக் கழகத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை.

தமிழகத்தில் உணவுப் பொருட்களை சேமித்து வைக்க போதிய கிடங்குகள் இல்லை. இதனால் தனியாருடனான கூட்டு ஒப்பந்தங்களின் மூலம் கிடங்குகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஏராளமான நிலங்கள் வீணாகக் கிடக்கின்றன. நகரப் பகுதிகளை ஒட்டியுள்ள நிலங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் வந்தாலும், கிராமப்புறங்களிலுள்ள நிலங்கள் வீணாக உள்ளன. இவற்றிலும் பயிர் சாகுபடியை தொடங்குவதைக் குறித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்திய உணவுக்கழக தென்மண்டல தலைமை பொது மேலாளர் எஸ்.ஆர். சிங், துணை பொது மேலாளர் ஷைனி வில்சன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.






Share this Story:

Follow Webdunia tamil