பீகாரில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இருக்க இருப்பிடம் இன்றி, உண்ண உணவின்றி, உடுத்த மாற்று உடை கூட இல்லாமல் ஒரே நாளில் நிர்கதியாய் நிற்கின்றனர்.
பீகார் மக்களுக்கு எமனாக இருந்த வெள்ள நீர், பஞ்சாப் விவசாயிக்கு வரப்பிரசாதமாக மாறியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் தனூரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுக்விந்தர் சிங்கின் நிலத்தில் நெல்லை சாகுபடி செய்திருந்தார். இந்த நிலத்தில் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டு விட்டது. இதனால் நெற் பயிர் அழுகி விட்டது. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட சிங்விந்தர் சிங் புதிய முயற்சியில் இறங்கினார்.
இது பற்றி அவர் கூறுகையில், வெள்ளநீர் நெற் பயிரை அழித்து விட்டது. இதனால் நாங்கள் நஷ்டமடைந்தோம். இந்த நஷ்டத்தை ஈடுகட்ட வயலில் தேங்கியள்ள வெள்ள நீரில் தாமரை மலர் வளர்க்க ஆரம்பித்தேன். தாமரை மலர் விற்பனை செய்ய நல்ல வாய்ப்பு உள்ளது. இதன் தண்டு பகுதியும் காய்கறியாக பயன் படுகிறது. அதனால் தண்டு பகுதியையும் விற்பனை செய்ய முடியும். தாமரை பயிரிடுவதால் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
வெள்ள நீரில் தாமரை நன்கு வளரும் என்பதை வேளாண் விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்கின்றனர்.
இது குறித்து விவசாய கல்லூரி முதல்வர் மில்கா சிங் கூறுகையில், இது வரை தாமரையை வழக்கமாக வளர்க்க வில்லை. இப்போது சுக்விந்தர் சிங் எடுத்துள்ள முயற்சியில் வெற்றி பெற்றால், இது புது வாய்ப்பாக அமையும். வெள்ள நீர் வெளியேர வழியில்லாத தாழ்வான பகுதிகளிலும், மற்ற பயிர்கள் சாகுபடி செய்ய முடியாத பகுதிகளிலும் தாமரை பயிரிடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.
நீர் தேங்கியுள்ள பகுதியில் தாமரை மலரை வளர்க்க முடியும். இது ஐந்து மாதங்களில் வளர்ந்து விடும். வருடத்திற்கு இரண்டு முறை மலர்களையும், தண்டுகளையும் பறிக்கலாம்.
தாமரை மலருக்குந கோயில்களில் விற்பனை செய்ய சிறந்த வாய்ப்பு உள்ளது. இதன் தண்டு பகுதி சமையலுக்கு பயன்படுவதால், இதற்கும் நல்ல சந்தை இருப்பதாக தெரிகிறது.