Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்கானிக் தேயிலை உற்பத்தி அதிகரிக்க முயற்சி!

ஆர்கானிக் தேயிலை உற்பத்தி அதிகரிக்க முயற்சி!
, வியாழன், 4 செப்டம்பர் 2008 (13:39 IST)
இந்தியாவில் இயற்கை வேளாண்மை மூலம் தேயிலை உற்பத்தி அதிகரிக்க ரூ.14 கோடி செலவில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் இரசாயன உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தாமல் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்வது அதிகரித்து வருகிறது. இவ்வாறு இயற்கை வேளாண்மை மூலம் உற்பத்தி செய்யப்படும் அரிசி, கோதுமை, காய்கறிகள், காபி, தேயிலை உட்பட எல்லை உணவுப் பொருட்களுக்கு அதிக விலையும் கிடைக்கிறது.

இராசயன உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தாமல், இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்த உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கென்று, சூப்பர் மார்க்கெட்டுகளில் தனி பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐரோப்பியா நாடுகளில், இயற்கை வேளாண்மையில் உற்பத்தி செய்ய பொருட்களுக்கு வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறையின் படி, உணவுப் பொருட்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நாடுகள் பங்கு கொள்ளும் நிதி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இது வளரும் நாடுகளுக்கு உணவு பொருள் உற்பத்தி, தரத்தை அதிகரித்தல், வர்த்தகத்தில் ஈடுபடுவது உட்பட பல்வேறு திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

இந்த திட்டம் வருகின்ற 19 ஆம் தேதி துவக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் படி, இரசாயன உரம், பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல், இயற்கையான முறையில் தேயிலை உற்பத்தி அதிகரிக்கப்படும்.

இந்தியாவில் தற்போது 9500 லட்சம் கிலோ தேயிலை உற்பத்தியாகிறது.

இதில் 50 லட்சம் கிலோவுக்கும் அதிகமாக “ஆர்கானிக் டீ” (organic tea) என்று அழைக்கப்படும் இயற்கை முறையில் பயிர் செய்யப்படும் தேயிலை உற்பத்தியாகிறது. இதில் பெரும் பகுதி ஆஸ்‌ட்ரேலியா, ஜெர்மனி, (Germany) ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த தேயிலை உற்பத்தியை அதிகரிக்க அஸ்ஸாம், டார்ஜிலிங்,( Darjeeling) தென் இந்திய மாநிலங்களில் தலா 100 ஹெக்டேர் பரப்பளவில் தேயிலை தோட்டங்களில், ஆர்கானிக் தேயிலை பயிரிட தேயிலை வாரியம் நிதி உதவி அளிக்க உள்ளது.

இந்தியாவை பொறுத்த அளவில் 1980 ஆம் ஆண்டில் முதன் முறையாக டார்ஜிலிங்கில் ஆர்கானிக் தேயிலை பயிரிடும் முயற்சி துவங்கியது. தற்போது நாட்டின் மொத்த ஆர்கானிக் தேயிலை உற்பத்தியில் பாதி அளவு, டார்ஜிலிங்கில் உற்பத்தியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு படிப்படியாக அஸ்ஸாம், தென் இந்திய மாநிலங்களில் ஆர்கானிக் தேயிலை உற்பத்தி விரிவுபடுத்தப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil