இந்தியாவில் உள்ள முக்கியமான 81 அணைகள் மற்றும் ஏரிகளில் அதன் மொத்த கொள்ளளவில் 63 விழுக்காடு நீர் இருப்பில் உள்ளது என்று மத்திய நீர் வாரியம் [Central Water Commission (CWC) ] அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள அணைகள், ஏரிகளில் நீர் நிலைகளின் நீர் இருப்பு, நீர் வரத்து போன்ற தகவல்களை மத்திய நீர் ஆதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய நீர் வாரியம் கண்காணித்து வருகிறது.
கங்கை, இந்தூஸ், நர்மதா, சபர்மதி, மகாநதி, காவேரி, கிருஷ்ணா ஆகிய ஆறுகளின் குறுக்கே உள்ள அணைகள், நீர் நிலைகளின் கடந்த பத்து ஆண்டுகளின் சராசரி அளவை விட, அதிக அளவு தண்ணீர் உள்ளது. கட்ச் வளைகுடாவில் உள்ள மாகி நதி, தெற்கில் இருந்து மேற்கு நோக்கி பாயும் நதிகளில் சராசரி அளவு தண்ணீர் உள்ளது. தாபி, கோதாவரி நதியில் தண்ணீர் குறைவாக ஓடுகிறது.
இந்த 81 அணைகள் மற்றும் நீர் நிலைகளில் பருவ மழை தொடங்குவதற்கு முன், ஜூன் 1 நிலவரப்படி 19 விழுக்காடு நீர் இருந்தது. இவற்றில் பருவமழை பெய்துள்ளதால் நீர் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 28 ஆம் தேதி நிலவரப்படி 63 விழுக்காடு நீர் உள்ளது. (மொத்த கொள்ளளவில்) .
மத்திய நீர் வாரியம் நீர் இருப்பு பற்றி கொடுக்கும் தகவலின் அடிப்படையில், விவசாய அமைச்சகம் உட்பட பல விவசாய அமைப்புகளுக்கு நீர் இருப்பு பற்றிய தகவலை வழங்குகிறது. இதன் அடிப்படையில் விவசாயிகள் எந்த பயிர் சாகுபடி செய்யலாம் என பரிந்துரை வழங்கப்படுகிறது.