பருவமழைக்கு காத்திருக்கும் வனத்துறை: தயார் நிலையில் நாற்றுகள்!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
தென்மேற்கு பருவமழை தொடங்கியவுடன் வனப்பகுதியில் நாற்றுக்கள் நட வனத்துறை தயார் நிலையில் உள்ளது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மாவட்ட வனகோட்டத்திற்கு உட்பட்டது சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்., பாளையம், ஆசனூர், தாளவாடி ஆகிய வனச்சரங்கள். தற்போது சத்தியமங்கலம் கோட்ட வனப்பகுதிகளில் பெரும்பாலான பகுதிகள் அடர்ந்த வனத்தை கொண்டதாகும்.
இருந்தபோதும் வனப்பகுதியில் தொடர்ந்து மரக்கன்றுகள் நடவும் பணியை மேற்கொண்டால்தான் வனப்பகுதியை வளமாக வைக்கமுடியும் என்பதை கருத்தில் கொண்டு அனைத்து வனசரகங்களிலும் புதிய நாற்றுகள் அதிகம் நடவேண்டும் என மாவட்ட வனஅதிகாரி எஸ்.இராமசுப்பிரமணியத்தின் உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் வனப்பகுதியில் பலவகையான மரக்கன்றுகளை நடவு செய்யவேண்டும். தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் நாற்றுக்கள் நடவு செய்யும் பணியை தொடங்கவேண்டும் என்பதால் தற்போது அனைத்து ரேஞ்சுகளில் உள்ள நாற்று பண்ணைகளில் பல்வேறு அரியவகை மரநாற்றுக்களும் சாதாரண மரநாற்றுக்களும் தயார் நிலையில் உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை ரேஞ்சர்கள் எம்.எஸ்.மணி, டி.மோகன், வீரபத்திரன், சிவமல்லு மற்றும் ராஜமோகன் மற்றும் வனவர்கள் பால்நேசமணி, ராஜேந்திரன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.