Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலக சந்தையில் இந்திய மிளகாய் தேவை அதிகரிப்பு!

உலக சந்தையில் இந்திய மிளகாய் தேவை அதிகரிப்பு!
, திங்கள், 28 ஜூலை 2008 (16:44 IST)
உலக சந்தையில் கடந்த ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்களில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மிளகாயின் அளவு வழக்கத்தைவிட 21 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தானில் மிளகாய் பயிரிடப்படும் பகுதிகளில் பெய்த கடும் மழையால் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் சென்ற வருடம் பாகிஸ்தானில் மிளகாய் உற்பத்தி பெருமளவிற்கு பாதிக்கப்பட்டது.

இந்த வருடம் சீனாவிலும் மிளகாய் உற்பத்தி பாதித்தது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து பாகிஸாதானுக்கும், இலங்கைக்கும் மிளகாய் ஏற்றுமதி செய்வது அதிகரித்தது என்று நறுமணப் பொருட்கள் வாரிய (Spice Board) அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்ற வருடம் (2007) ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்களில் 41,350 டன் மிளகாய் ஏற்றுமதி செய்யப்பட்டது.

இந்த வருடம் இந்த இரண்டு மாதங்களில் 50 ஆயிரம் டன் மிளகாய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் 20.91 விழுக்காடு அதிகம்.

மிளகாய் உற்பத்தி செய்யும் நாடான பாகிஸ்தானுக்கு வழக்கமாக இந்தியாவில் இருந்து மிக குறைந்த அளவே மிளகாய் ஏற்றுமதியாகும். 2007இல் ஏப்ரல், மே மாதங்களில் 700 டன் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டது.

ஆனால் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மிளகாய் ஏற்றுமதி 23 மடங்கு அதிகரித்து 16 ஆயிரத்து 170 டன் ஏற்றுமதியாகி உள்ளது.

இலங்கைக்கும் மிளகாய் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. சென்ற வருடம் ஏப்ரல், மே மாதங்களில் 5,000 டன் மட்டுமே ஏற்றுமதியாகி இருந்தது. இது இந்த வருடம் 7,000 டன்னாக அதிகரித்துள்ளது.

ஆனால் மிளகாய் அதிக அளவு உற்பத்தி செய்யப்படும் மற்றொரு நாடான வங்காளதேசத்திற்கு மிளகாய் ஏற்றுமதி குறைந்துள்ளது. சென்ற வருடம் ஏப்ரல், மே மாதங்களில் 5,800 டன் ஏற்றுமதி செய்யப்பட்டது. இது இந்த வருடம் 60 டன்களாக குறைந்துள்ளது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மிளகாய், அதில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் கட்டாயத் தர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதனால் உலக சந்தையில் இந்திய மிளகாய்க்கு வரவேற்பு அதிகரித்துள்ளது என்று நறுமணப் பொருட்கள் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசியாவின் பெரிய மிளகாய் சந்தையான குண்டூரில் இருந்து வரும் தகவல்கள் இலங்கைக்கு தொடர்ந்து மிளகாய் ஏற்றுமதி ஆகும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றன. ஆனால் பாகிஸ்தான் தேவையான அளவு இறக்குமதி செய்து விட்டதால், இனி பாகிஸ்தானுக்கு ஏற்றமதியாகும் வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil