காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் நீர் மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் அணையின் நீர் 55 அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையின் கிழக்கு - மேற்கு கால்வாய்கள் மூலம் சேலம் மற்றும் நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்காக திறக்கப்படும்.
டிசம்பர் 15ஆம் தேதி வரை 137 நாட்களுக்கு 9.5 டி.எம்.சி தண்ணீர் விடப்படும். நடப்பு ஆண்டில் பருவமழை தவறியதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து போனது. காவிரி டெல்டா பாசனத்திற்காக நாள் ஒன்றுக்கு 1 டி.எம்.சி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இப்போது, இருப்பில் உள்ள தண்ணீர் இன்னும் 11 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். குறுவை பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலையில் கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால், கால்வாய் பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நேற்று மாலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 56.54 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 919 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 12,006 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 55 620 அடியாக உள்ளது. அணைக்கு 946 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு 11,988 கனஅடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
கல்லணையில் இருந்து 51 கனஅடியும், வென்னார் அணையில் இருந்து 6,554 கனஅடியும், கல்லணை கால்வாயில் இருந்து 810 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
3 ஆண்டுக்கு பின்னர் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55 அடியாக குறைந்தது. அணையில் இருக்கும் கிறிஸ்தவ கோபுரம் வெளியே தெரிந்தது.