பருவமழை போதிய அளவு பெய்யாததால், உணவு தானிய உற்பத்தி குறையும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை சராசரி அளவு பெய்யும் என்று முன்பு வானிலை ஆராய்ச்சி நிறுவனம் கணித்து அறிவித்தது.
ஆனால் பல பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இத்துடன் காற்றின் ஈரப்பதமும் குறைந்து வருகிறது. பல மாநிலங்களில் வறட்சி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கரிஃப் பருவத்தில் உணவு தானிய உற்பத்தி பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
கடந்த மூன்று வாரங்களாக கேரளா, கர்நாடாக, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காற்றில் ஈரப்பதம் குறைந்து வருகிறது. இந்த மாநிலங்களில் மழை பெய்யவில்லை என்றால் தற்போது சாகுபடி செய்துள்ள பயிர்கள் பாதிக்கப்படும்.
குஜராத் மாநிலத்திலும் மழை குறைவாகவே பெய்துள்ளது. இதனால் குஜராத் மாநிலத்தில் கரிஃப் பருவத்தில் சாகுபடி செய்துள்ள பயிர்களும் பாதிப்பிற்கு உள்ளாகும் சூழ்நிலை நிலவுகிறது.
வானிலை ஆய்வு மையம் இந்தியாவை 36 மண்டலங்களாக பிரித்துள்ளது. இதில் ஜூலை 16ஆம் தேதி நிலவரப்படி 22 மண்டலங்களில் சராசரி முதல் அதிக அளவு மழை பெய்துள்ளது. 14 மண்டலங்களில் சராசரி அளவு மழை பெய்யாததுடன் மழை குறைந்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக மேற்கு மற்றம் தென் மாநிலங்களில் மழை பெய்யும் என்ற நம்பிக்கை குறைந்து வருகிறது. இந்த மாநிலங்களில் நெல், சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி போன்றவை பயிர் செய்யப்பட்டுள்ளன. இவை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அறுவடைக்கு தயாராகும். ஆனால் போதிய நீர் பாசனம் கிடைக்காமல் காற்றில் ஈரப்பதம் குறைந்து வெப்பம் அதிகரித்தால், இந்த பயிர்களின் உற்பத்தி பாதிக்கப்படும் என்ற கவலை எழுந்துள்ளது.
சென்ற கரிஃப் பருவத்துடன் ஒப்பிடுகையில், இந்த கரிப் பருவத்தில் நிலக்கடலை, பருத்தி சாகுபடி செய்யும் அளவு குறைந்துள்ளது. சில மாநிலக்களில் தென்மேற்கு பருவமழை காலத்தில் ஜூலை மாதம்தான் அதிக அளவு மழை பெய்யும். ஆனால் மழை பெய்வதற்கான அறிகுறி தெரியாததால் விவசாயிகள் மத்தியில் அச்ச உணர்வு எழுந்துள்ளது.
இதை விட கடைசி நேரத்தில் அதிக அளவு மழை பெய்தால் பயிர்கள் நாசமாகும் நிலையும் ஏற்படும்.