அமெரிக்கா அதன் நாட்டு விவசாயத் துறைக்குக் கொடுக்கும் மானியத்தை உண்மையாகவே குறைக்க வேண்டும் என்று வர்த்தக அமைச்சர் கமல்நாத் கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க வந்துள்ள மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் பேசுகையில், அமெரிக்கா அதன் விவசாயத் துறைக்கு அளித்து வரும் மானியத்தை குறைப்பதாக கூறியுள்ளது. உலக சந்தையில் தற்போது உள்ள உணவு தானியங்களின் விலையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்கா அறிவித்துள்ள மானியம் மிக சொற்பமே. அது உண்மையாகவே விவசாயத் துறை மானியத்தைக் குறைக்க முன்வரவேண்டும். வளர்ந்த நாடுகள் உண்மையிலேயே விட்டுக் கொடுக்க வேண்டும். வளரும் நாடுகளிடம் இருந்து இலாபம் கிடைக்குமா என்று எதிர்பார்க்க கூடாது என்று கமல்நாத் கூறினார்.
அமெரிக்கா நேற்று 15 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) டாலர் அளவிற்கு மானியத்தை குறைப்பதாக அறிவித்தது.
மக்களவையில் அரசு மீது நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நேற்று நடந்தது. இதனால் கடந்த நான்கு நாட்களாக நடந்து வரும் பேச்சு வார்த்தையில் கமல்நாத் கலந்து கொள்ளவில்லை. இவருக்கு பதிலாக மத்திய வர்த்தக துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கலந்து கொண்டார்.