உலக வர்த்தக அமைப்பு (WTO) கூட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன் உட்பட வளர்ச்சி அடைந்த நாடுகளின் ஆலோசனையை இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அக்ஜென்டைனா ஆகிய வளரும் நாடுகள் நிராகரித்தன.
உலக வர்த்தக அமைப்பின் குறிப்பிட்ட நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டம் ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. இதில் தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையில் நிலவிவரும் சிக்கலை தீர்ப்பதற்கு ஆலோசிக்கபட்டு வருகின்றன.
அமெரிக்கா போன்ற வளரும் நாடுகள், தங்கள் நாட்டு விவசாய துறைக்கு கொடுத்து வரும் மானியத்தை குறைக்க வேண்டும். வளரும் நாடுகள் ஏற்றுமதி செய்யும் விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்பாடுகளையும், தடைகளையும் நீக்க வேண்டும், இறக்குமதி வரி விதிக்க கூடாது என்று இந்தியா உட்பட வளரும் நாடுகள் கூறி வருகின்றன.
இத்துடன் தங்கள் நாட்டு தொழில் துறையை பாதுகாத்து கொள்வதற்காக, வளரும் நாடுகள் ஏற்றுமதி செய்யும் தொழில் துறை உட்பட உற்பத்தி சார்ந்த பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி உட்பட பல்வேறு வகையிலான தடைகளை ஏற்படுத்த கூடாது என்றும் வளரும் நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
வளரும் நாடுகள் சார்பில் தொழில் துறை சார்ந்த விஷயங்களை அணுகுவதற்காக இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அர்ஜென்டைனா உட்பட 11 நாடுகள் தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றன. இந்த குழு நாமா-11 (Non-Agriculture Market Access-11 - NAMA-11) என்று குறிப்பிடப்படுகிறது.
நாமா-11 சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ஏற்கனவே அமைச்சர் அளவிலான ஆலோசனைக்காக சுற்றுக்கு விடப்பட்டுள்ள ஒப்பந்த நகல் ஆவணத்தில் வளரும் நாடுகளுக்கு மிக குறைந்த அளவே வாய்ப்பு உள்ளது. இதை மேலும் குறைக்க அனுமதிக்க மாட்டோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், வளரும் நாடுகள் தங்கள் நாட்டு சந்தையை அதிக அளவு திறந்து விடவேண்டும் என்று கூறியுள்ளன.
இந்த பேச்சு வார்த்தையில் அமெரிக்கா சார்பில் கலந்து கொள்ளும் வர்த்தக பிரதிநிதி சூசன் ஸ்குப் கூறுகையில், எல்லா நாடுகளும் விவசாய விளை பொருட்கள், தொழில் துறை உற்பத்தி மற்றும் சேவை துறையின் சந்தையை பகிர்ந்து கொள்ளுக் கூடிய வகையில் இருக்கும். குறிப்பாக வளரும் நாடுகளுக்கு பயனளிக்கும் வகையில் ஜெனிவாவில் நடக்கும் பேச்சுவார்த்தையில் நல்ல தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்பதாக கூறினார்.
உலக வர்த்தக அமைப்பின் தகவல் தொடர்பு துறை இயக்குநர் கீத் ரோக்வால் கூறுகையில், வளரும் நாடுகளில் இந்தியா முக்கியமான நாடு. இந்த பேச்சுவார்த்தையில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது. இதன் நிலையை பொறுத்தே பேச்சுவார்த்தையின் முடிவுகள் இருக்கும் என்று தெரிவித்தார்.
ஜெனிவாவில் நடந்து வரும் பேச்சுவார்த்தை குறித்து மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் நேற்று கருத்து தெரிவிக்கையில், எல்லா தரப்பும் சிக்கலான நிலையில் உள்ளன என்றார்.
உலக வர்த்தக அமைப்பு அதன் உறுப்பு நாடுகளிடையே எவ்வித தடையும் இல்லாமல் வர்த்தகம் நடப்பதற்காக புதிய உடன்பாடு ஏற்பட நாடுகளிடையே பேச்சு வார்த்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த பேச்சு வார்த்தை கட்டார் நாட்டின் தலைநகர் தோஹாவில் 2001ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இதனால் இது தோஹா சுற்றுப் பேச்சு வார்த்தை என்று குறிப்பிடப்படுகிறது. 2008ஆம் ஆண்டு இறுதிக்குள் இறுதி உடன்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று காலவரையறையும் நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் இது வரை பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்கு காரணம் வளரும் நாடுகளுக்கும், வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கும் இடையே வர்த்தக சந்தையை திறந்து விடுவதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
இதற்கு முன்பு மெக்சிகோ நாட்டின் கான்கன் நகரிலும், ஹாங்காங்கிலும் அமைச்சர்கள் அளவிலான கூட்டம் நடைபெற்றது. இதில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.
உலக வர்த்தக அமைப்பில் மொத்தம் உள்ள 152 நாடுகளில், வளரும் நாடுகள் பெரும்பான்மையாக உள்ளன. இவை வளரும் நாடுகளுக்கு பாதகமான முடிவை வளர்ச்சி அடைந்த நாடுகள் எடுப்பதை தடுக்கவும், தங்களுக்குள் ஆலோசனை நடத்தவும், பேச்சு வார்த்தையில் ஒருமித்த கருத்துடன் பங்கேற்கவும் ஜி-20, ஜி-33, நாமா-11 என்ற பெயரில் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளன.