உலக வர்த்தக அமைப்பில் உடன்பாடு ஏற்பட விவசாய விளை பொருட்கள் பற்றிய மானியம் பற்றி விவாதிக்கலாம் என்று மத்திய வர்த்தக துறை செயலாளர் தெரிவித்தார்.
உலக வர்த்தக அமைப்பின் தோஹா ஒப்பந்தம் ஏற்படுவதற்கு நீண்ட காலமாக உள்ள தடை குறித்து விவாதிக்க முக்கிய நாடுகளின் அமைச்சர் மட்டத்திலான கூட்டம் ஜெனிவாவில் நடைபெறுகிறது. இந்த கூட்டம் ஜூலை 21 ஆம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் ஜூலை 21 ஆம் தேதி ஜெனிவாவிற்கு செல்வதாக இருந்தது. மக்களவையின் சிறப்பு கூட்டம் ஜூலை 21, 22 ஆகிய இரு தினங்கள் நடைபெறுகின்றது.
இதில் மத்திய அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்கிறது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டியதிருப்பதால் கமல்நாத் ஜெனிவாவிற்கு வரவில்லை. இவர் ஜூலை 22 ஆம் தேதிக்கு பிறகு வருவார் என்று தெரிகிறது.
அவருக்கு பதிலாக இதில் பங்கேற்க வந்துள்ள மத்திய வர்த்தக துறை செயலாளர் கோபால் பிள்ளை, வளர்ந்த நாடுகளுக்கும், வளர்ந்து வரும் நாடுகளுக்கு இடையே கருத்து ஒற்றுமை இருந்தால், உலக வர்த்தக அமைப்பின் நகல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட விவசாய விளை பொருட்களின் மானியம், தொழில்துறை உற்பத்தி பொருட்களின் சுங்க வரி பற்றி விவாதிக்கலாம்.
இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி-33 நாடுகளின் கூட்டத்திற்கு பிறகு, கோபால் பிள்ளை மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகள் விவசாய மானியம், தொழில் துறை பொருட்களின் சுங்க வரி விஷயத்தில் நகல் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதற்கு மாறாக முடிவு எடுத்தால், மற்ற நாடுகளும் இதே மாதிரி முடிவு எடுக்கும் வாய்ப்பு ஏற்படும்.
விவசாய மானியம் குறித்து 30 அமைச்சர்களின் (ஜி-33 அமைப்பு ) இறுதி கருத்தும், கூட்டு சேர நாடுகளின் அமைப்பு கருத்தும் இன்று தெளிவாக தெரிந்துவிடும் என்று கோபால் பிள்ளை தெரிவித்தார்.
உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் ஜூலை 24 அன்று இந்தியா அதன் சலுகைகளையும், மற்ற நாடுகளின் சந்தையை பயன்படுத்திக் கொள்வதற்கு கேட்கும் சலுகை பற்றிய விபரங்களை தாக்கல் செய்யும்.
இதில் ஜி-33 அமைப்பின் சார்பில் பங்கேற்றுள்ள 30 நாடுகளின் குழு, அவை அளிக்க தயாராக உள்ள ஐந்து சலுகைகள் பற்றிய விபரம், எதிர்பார்க்கும் சலுகை பற்றிய விபரங்களை தாக்கல் செய்யும்.