கோதுமை விலை உயர்வை தடுக்கும் வகையில் இதை வெளிச் சந்தையில் விற்பனை செய்வது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் சரத் பவார் தெரிவித்தார்.
அரசு ரேஷன் கடைகளில் மானிய விலையில் கோதுமை விநியோகிக்கிறது. இதற்கும் வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்படும் கோதுமை விலைக்கும் அதிக வேறுபாடு உள்ளது. இத்துடன் கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் ரவை, ஆட்டா, மைதா விலையும் அதிக அளவு இருக்கின்றது.
இவைகளின் விலை குறையவும், தாராளமாக கிடைக்கும் வகையில் மத்திய அரசு கோதுமையை வெளிச் சந்தையில் விற்பனை செய்ய உள்ளது.
புது டெல்லியில் இன்று இந்திய விவசாய ஆராய்ச்சி கழக விழா நடைபெற்றது. அப்போது மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் செய்தியாளர்களிடம் பேசும்போது, வெளிச் சந்தையில் விற்பனை செய்வதற்காக 6 லட்சம் டன் கோதுமை ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதை விற்பனை செய்வதற்கான முடிவு நாளை (இன்று) எடுக்கப்படும்.
சில பகுதிகளில் கோதுமை விலை அதிகரித்துள்ளது. விலை உயர்ந்துள்ள பகுதிகளில் கோதுமை விற்பனை செய்யப்படும்.
நாம் அரசின் வசம் 45 லட்சம் டன் கோதுமை இருப்பாக வைக்க வேண்டும். இப்போது இருப்பு 55 லட்சம் டன் உள்ளது. கூடுதலாக 10 லட்சம் டன் இருக்கிறது. இதில் 6 லட்சம் டன் வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்படும்.
இது வரை மத்திய அரசு விவசாயிகளிடம் இருந்து 264 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளது. இது இல்லாமல் மாநில அரசுகள் 12 லட்சம் கொள்முதல் செய்துள்ளன. அடுத்த ஒன்றறை மாதங்களில் மேலும் பத்து லட்சம் டன் கொள்முதல் செய்யப்படும். இந்த வருடம் நிச்சயம் 275 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற சரத் பவார் தெரிவித்தார்.