நமது நாட்டின் அதிகரித்துவரும் உணவுத் தேவைக்கேற்ப வேளாண் உற்பத்தியைப் பெருக்கவேண்டுமெனில் அரசு வடிக்கும் முன்னேற்றத் திட்டத்தின் மையமாக வேளாண்மை இருக்கவேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் கூறியுள்ளார்.
புதுடெல்லியில் இன்று இந்திய வேளாண் ஆராய்ச்சிப் பேரவையின் (Indian Council for Agriculture Research - ICAR) 79வது நிறுவன நாளை முன்னிட்டு நடந்த விருதுகள் வழங்கு விழாவில் கலந்துகொண்டு, அப்பேரவையின் 78 ஆண்டுக்கால பணியைப் பாராட்டிப் பேசிய குடியரசுத் தலைவர், உயிரி தொழில்நுட்ப மேம்பாட்டைப் பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை சீராக அதிகரிப்பதன் மூலம் இரண்டாவது பசுமைப் புரட்சியை - அதுவும் இயற்கை வளம்குன்றா நிரந்தரப் பசுமைப் புரட்சியை - ஏற்படுத்திடவேண்டும் என்றார்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி பேரவை உலகிலேயே மிகப்பெரிய பயிர் மரபணு வங்கியை உருவாக்கும் முயற்சியை துவங்கியிருக்கும் நிலையில் வளங்குன்றா வேளாண்மையும் உற்பத்திப் பெருக்கமும் சாத்தியமே என்று கூறிய பிரதீபா பாட்டீல், வீரிய விதைகள், தீவிர வேளாண் முறைகள், சிறந்த நீர் பயனீட்டு முறைகள் மூலம் இதனை உறுதியாகச் சாதிக்க முடியும் என்று கூறினார்.
நமது நாட்டின் வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்குரிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் ஐகாருடன், வேளாண் பல்கலைகளும், தொழிலகங்களும் கைகோர்க்க வேண்டும் என்றார்.
வேளாண்மையில் சற்றேறக்குறைய 65 விழுக்காடுப் பணியை பெண்களே செய்வதால் அவர்களுக்கு ஏதுவான கருவிகளையும், தொழில்நுட்ப சாதனங்களையும் உருவாக்கிடவேண்டும் என்றும் கூறிய குடியரசுத் தலைவர், பெண்களுக்கு ஆதரவான திட்டங்களும், அணுகுமுறையும் வேளாண் உற்பத்தியை நிச்சயம் அதிகரிக்கும் என்றார்.