காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர் மட்டம் மளமளவென குறைந்து வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசன பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
தொடக்கத்தில் வினாடிக்கு 6,000 கனஅடியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பின்னர், நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
இதனால், அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்தது.
நேற்று நண்பகல் 12 மணிக்கு வினாடிக்கு 13,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. பாசன பகுதிகளில் தேவை குறைந்ததால் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 70.74 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,554 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 13,197 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
கல்லணையில் இருந்து காவிரிக்கு 808 கனஅடி நீரும், வென்னாறுக்கு விநாடிக்கு 7,302 கன அடி வீதமும், கல்லணை கால்வாயில் 2,017 கன அடி, கொள்ளிடம் கால்வாயில் 988 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.