திருச்சி மாவட்டத்திற்கு விரைவில் 1,300 டன் யூரியா உரம் வந்து சேரும் என்று கிருஷ்ணன் தெரிவித்தார்.
இஃப்கோ என்று அழைக்கப்படும் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனத்தின் திருச்சி பிராந்திய தலைமை மேலாளர் பி.கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சி மாவட்டத்திற்காக முன்னரே ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,300 டன் யூரியா கூடிய விரைவில் வந்து சேரும்.
இது இல்லாமல் தஞ்சை மாவட்டத்திற்காக 2,600 டன் யூரியா விநியோகிக்கும் ஏற்பாடுகளை இஃப்கோ செய்துள்ளது. இதில் தஞ்சை பகுதிக்கு 1,300 டன், கும்பகோணம் பகுதிக்கு 1,300 டன் விநியோகிக்கப்படும்.
இத்துடன் தஞ்சை, கும்பகோணத்திற்கு தலா 1,300 டன் டி.ஏ.பி உரம் பாரதீப் துறைமுகத்தில் ரயில்வே வேகன் மூலமாக நேரடியாக வந்து சேரும் ஏற்பாடுகளை இஃப்கோ செய்துள்ளது.
இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து இஃப்கோ 10,110 டன் டி.ஏ.பி, 14,500 டன் என்.பி.கே, 14,200 டன் யூரியா உட்பட மொத்தம் 39 ஆயிரம் டன் உரம் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.
மேட்டூர் அணையில் இருந்து வழக்கம் போல ஜூன் 12ஆம் தேதி காவிரி டெல்டா பகுதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் இந்த பகுதியில் நெல் சாகுபடி வேலைகள் துரித கதியில் நடந்து வருகிறது.