புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் முந்திரி பதனிடும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் அதிக அளவு முந்திரி தோப்புக்கள் உள்ளன. இங்கு விளையும் முந்திரியை பதப்படுத்துவதற்கான வசதி இல்லை.
எனவே இங்கு தமிழக அரசு முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்த கட்சியின் மாவட்ட செயலாளர் சகாபுதீன் விடுத்துள்ள அறிக்கையில், கந்தர்வக்கோட்டை பகுதியில் அதிக அளவு நிலப்பரப்பில் முந்திரி மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இவைகளுக்கு பயன் அளிக்கும் விதத்தில் இங்கு முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
இலங்கை படையினர் இந்திய மீனவர்கள் மீது அடிக்கடி துப்பாக்கி சூடு நடத்துகின்றனர். அத்துடன் மீனவர்களை சிறை பிடிக்கின்றனர். இதனை தடுக்க மத்திய அரசு கச்சத் தீவு எல்லையை மாற்றி அமைக்க இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மாற்றக்கூடாது. கந்தவர்வக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.