ஜூன் இறுதிக்குள் விற்பனை செய்யப்படாத டி.ஏ.பி. உரத்தை தமிழ்நாடு உர மேம்பாட்டு இணையத்திடம் (டான்பெட்) ஒப்படைக்க விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு ஜூலை 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வேளாண் துறை செயலாளர் சுர்ஜித் கே.சௌத்ரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜூன் இறுதிக்குள் விற்பனை செய்யப்படாத டி.ஏ.பி. உரத்தை ஜூலை 4-க்குள் டான்பெட் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு கடந்த ஜூன் 26ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்தக் காலக் கெடுவை மேலும் 60 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வேளாண் இடுபொருள் வணிகர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று ஜூன் இறுதிக்குள் விற்பனையாகாத டி.ஏ.பி. உரத்தை டான்பெட் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான காலக்கெடு ஜூலை 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 11-க்குள் டி.ஏ.பி. உரத்தை ஒப்படைக்கத் தவறும் உர வணிகர்களின் உரிமம் ரத்து செய்யப்படும். இதையும் மீறி பதுக்கி விற்பனை செய்யும் வணிகர்களின் மொத்த இருப்பும் பறிமுதல் செய்யப்படும்.
டி.ஏ.பி. உரத்தை விவசாயிகளுக்கு விற்பனை செய்ததற்கான ரசீதுகளையும், இருப்பு விவரத்தையும் சில்லறை வணிகர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட வேளாண் துணை இயக்குநரிடம் தெரிவிக்க வேண்டும். தாங்கள் விற்பனை செய்யும் அனைத்து வகை உரங்களின் அதிகபட்ச விலை விவரங்களை உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய வேண்டும்.
2008 ஜூன் வரை 36,000 மெட்ரிக் டன் டி.ஏ.பி. உரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 13,000 மெட்ரிக் டன் டி.ஏ.பி. உரத்தை வழங்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இந்தக் கோரிக்கை மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. ஜூலையில் விவசாயிகளுக்குத் தேவையான அளவு டி.ஏ.பி. உரம் அரசின் கையிருப்பில் உள்ளது என்று செளத்ரி கூறியுள்ளார்.