மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பகுதிக்கு தண்ணீர் திறந்து விடுவதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை அணையின் நீர் மட்டம் 88.68 அடியாக இருந்தது. அணையின் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி.
அணையில் இருந்து விநாடிக்கு 11,983 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு விநாடிக்கு 479 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கல்லணையில் இருந்து வென்னார், காவிரி ஆறுகளில் விநாடிக்கு தலா 3,472 கன அடியும், கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 976 கனஅடி நீர் திறந்து விடப்படுவதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
காவிரி பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாத காரணத்தினால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கவில்லை. அதே நேரத்தில் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
தற்போது அணையில் 52 டி.எம்.சி தண்ணீரே இருப்பில் உள்ளது. இதில் 10 டி.எம்.சி குடிநீர் தேவைக்காகவும், மீன்களை பாதுகாக்கவும் அணையில் இருப்பு வைக்க வேண்டும். மீதமுள்ள 42 டி.எம்.சி தண்ணீரை மட்டுமே பாசனத்திற்கு திறந்துவிட முடியும். இது 45 நாட்கள் பாசனத்திற்கு போதுமானது.
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்யாவிட்டால், மேட்டூரில் இருந்து பாசனத்திற்கு திறந்து விடப்படுவது நிறுத்தும் சூழ்நிலை ஏற்படும். இது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.