''உரத்தைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும்'' என்று வேளாண் துறை செயலாளர் சுர்ஜித் கே.சௌத்ரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உர பதுக்கலைக் கண்டுபிடிக்க மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவினர் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, மதுரை, தேனி, திருநெல்வேலி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் 23 மொத்த விற்பனைக் கடைகளிலும், 578 சில்லறை விற்பனைக் கடைகளிலும் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையில் தேனியில் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து கேரளத்துக்கு கடத்தப்படவிருந்த 150 டன் உரம் பறிமுதல் செய்யப்பட்டது. அரசு அங்கீகாரம் பெறாத 12 இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,334 மெட்ரிக் டன் டி.ஏ.பி. உரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 1ஆம் தேதி முதல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் மட்டுமே டி.ஏ.பி. உரம் விற்பனை செய்ய வேண்டும். இதனைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. டி.ஏ.பி. உரம் விற்பனை செய்து வரும் உர நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள் தங்கள் நிறுவனத்தின் முகவரி, ஜூன் இறுதி வரை இருப்பு விவரம் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.
ஜூன் இறுதிக்குள் விற்பனை செய்யப்படாத டி.ஏ.பி. உரத்தை ஜூலை 5-ம் தேதிக்குள் தமிழ்நாடு உர விற்பனை மேம்பாட்டு இணையத்திடம் (டான்பெட்) ஒப்படைக்க வேண்டும். அதனை மீறி உரத்தைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும் என்று சுர்ஜித் கே.சௌத்ரி தெரிவித்துள்ளார்.